29 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

இஸ்ரேலிய பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் எதிராக கைது ஆணை பிறப்பிக்க மலேசியா வலியுறுத்த வேண்டும்: -பொன். வேதமூர்த்தி

🔥 Views : 11
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலாலம்பூர், அக்.18:
இஸ்ரேலை ரோம் சட்டப் பிரிவு 14 இன் படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும்படி ஓ.ஐ.சி. அமைப்பையும் ஐ.சி.சி. அமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ள இஸ்லாமிய நாடுகளையும் மலேசிய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி.யும் ஹிண்ட்ராஃப் இயக்கமும் வலியுறுத்துகின்றன.

இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான அட்டூழியங்களுக்காக இஸ்ரேல் பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் கைது ஆணை பிறப்பிக்கும்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் கரீம் ஏ.ஏ. கானை இஸ்லாமிய நாடுகள் ஒருமித்து வலியுத்த வேண்டும் என்று எம்.ஏ.பி. தலைவர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகைய குற்றங்களுக்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் கரீம் ஏ.ஏ. கான் கைது ஆணைப் பிறப்பித்திருந்தார்.

காசாவில் உள்ள குடிமக்கள் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர்த் தாக்குதல் சர்வதேச சட்டத்தின்படி அப்பட்டமான அத்துமீறல் ஆகும்; அத்துடன் ஜெனிவா ஒப்பந்தம், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற ரோம் சட்டம் ஆகியவற்றின்படி இவை போர்க் குற்றம் என்பதுடன் மனித குலத்திற்கு எதிரானதும் ஆகும்.

காஸாவில் பொதுமக்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தும் இஸ்ரேல், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற ரோம் சட்டப் பிரிவு-7, உட்பிரிவு (1), (டி)-இன்படி அத்துமீறியுள்ளது;

பொதுமக்கள்மீது குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்வதுடன் உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை தடைசெய்வதன் மூலம் போர்க் குற்றச் சட்டம் பிரிவு 8, உட்பிரிவு 2இன் ‘ஏ’ முதல் ‘டி’ வரையிலான துணை விதிகளையும் இஸ்ரேல் மீறியுள்ளது.

அல் ஜஸீரா ஊடகத் தகவலின்படி, முதல் ஆறு நாட்களில் 4,000 டன் எடையுள்ள 6,000 குண்டுகளை போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் ஏவியுள்ளது. இது, ஆஃப்கானிஸ்தானில் ஓராண்டு காலத்தில் அமெரிக்கா ஏவிய வெடிகுண்டுகளுக்கு சமமானதாகும்.

காசா குடிமக்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் நியாயமானது அல்ல என்பதுடன் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுவதற்கான வாய்ப்பையும் வழங்கவில்லை. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை-கள் உட்பட, 2750க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; ஒரு மில்லியனுக்கும் அதிகமான காசா மக்கள் பலவந்தமாக இடம்பெயர வைக்கப் பள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதுவரை அமைதிகாப்பதுடன் காஸாவில் குண்டுமழை பொழிவது குறித்தோ அத்யாவசியத் தேவையான உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள் தடைசெய்யப்பட்டுள்ளது பற்றியோ எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், காஸா மக்கள் மீதான குண்டுவீச்சு மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் கட்டாய இடப்பெயர்வுக்கு எதிரான பன்னாட்டு நடவடிக்கைக்கு மிதவாத முஸ்லிம் நாடான மலேசியாவால் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றமுடியும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொன் வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles