
🔊To listen to this news in Tamil, Please select the text.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அனைத்து குடிமக்களுக்கும் சமமான பாதுகாப்பு அளிக்கப்படும் வேளையில், பல இன மற்றும் கலாச்சார சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சாலே உணர வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அண்மையில் வெளிப்படுத்திய கருத்து குறித்து எதிர்வினை ஆற்றியுள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர், இனங்களுக்கிடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு நிலைக்கு எதிராக வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் தன்மையிலான அறிக்கையை லிம் கிட் சியாங் வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்பில் வழக்கறிஞர் கார்த்திகேசன் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் மாண்புக்குரிய மாமன்னரின் நம்பிக்கையைப் பெறும் எவரும் இனம்-சமயம் உள்ளிட்ட அம்சங்களைக் கடந்து நாட்டின் பிரதமராகலாம் என்பது கூட்டரசின் அரசியலமைப்பு விதியில் தெளிவாக உள்ளது; எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விசயத்தை குறிப்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் அம்சம் குறித்து தேவையின்றி விவாதித்து அமைதியின்மையை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்று கார்த்திகேசன் வினவியுள்ளார்.
அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் வேறுபாட்டைக் கடந்து தேச நலனை முன்னிறுத்துவதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பாடுபடுவதற்குப் பதிலாக அற்ப விசயங்கள் குறித்து விவாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன் அரசியலில் இனபேதம் தலைதூக்கியுள்ள தற்போதைய நிலையில், மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பே இல்லை; இருப்பினும், துன் மகாதீர் சொல்வது போல், எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் உண்மையான புரிதலும் நம்பிக்கையும் மலர்ந்தால் எதுவும் சாத்தியமாகலாம்;
“நாடு சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆகிறது; குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகள் மலேசியர்களால் புறக்கணிக்கப்படும்போது உண்மையான இன ஒற்றுமையும் புரிந்துணர்வும் எதிர்காலத்தில் ஏற்படலாம்” என்று அவர் மேலும் கூறினார்.
காவல் துறையும், பொறுப்பற்ற அரசியல்வாதிகளால் மக்களின் எதிர்வினைகளைக் கிளறச் செய்யும் அற்பமான பிரச்சினைகளின்மீது விசாரணை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும். அற்பமான விஷயங்களுக்கு காவல்துறை எவ்வளவு கவனம் செலுத்துகிறதோ, அந்த அளவுக்கு இந்த மக்கள் அரசியல் லாபத்திற்காக காவல்துறையின் பொன்னான நேரத்தை பயன்படுத்துவார்கள் என்று கார்த்திகேசன் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
