
-நக்கீரன்
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், டிச.22-
மலேசியத் திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், கருஞ்சட்டைப் படை, பேராக் பெரியார் பாசறை, மலேசியத் தமிழர் தன்மானப் பேரவை உள்ளிட்ட ஐந்து சுயமரியாதை இயக்கங்களின் இளைஞர் அணிகளின் சார்பில் பன்னாட்டு பகுத்தறிவுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
உடனே ஐநா மன்றத்தின் சமாதான சின்னம் அண்ணல் காந்தி அடிகளைக் கொன்றுத் திர்த்த சனாதன ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தமும் மதவெறி உணர்வும் மேவிய ஒரு கூட்டம், பச்சை பச்சையாக பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு வருகிறது.
இந்தப் பகுத்தறிவுக் கூட்டம், தமிழ் நாட்டைக் கெடுத்தது போதாமல் மலேசியாவையும் கெடுக்க முனைகிறது; அந்நிய சக்திகளிடம் நிதியைப் பெற்றுக் கொண்டு மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது; மலேசியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டு கோட்பாடுகளில் ஒன்றான ‘இறைவன்மீது நம்பிக்கை வைத்தல்’ என்பதற்கு எதிரானவர்கள் என்னும் முக்கருத்துகளை மட்டும் முன்வைத்து முதலில் பத்து ஆராங், அடுத்து கோலாலம்பூரில் முழுநாள் கருத்தரங்கு நடத்தத் திட்டமிட்ட ஏற்பாட்டுக் குழுவினருக்கு இடம்கொடுப்பவர்களை தடுத்து வருகின்றனர்.
மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், ஆகம அணி, மலேசிய இந்து வழக்கறிஞர் சங்கம் ஆகிய சமய அமைப்புகளின் தலைவர்கள்கள்தான் இப்படி பேசி வருகின்றனர். சமூக ஊடகம் என்னும் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தபின் சந்துமுனை சிந்துபாடும் சில சில்லறைகளும் அறைகுறைகளும்கூட இதேப் பின்பாட்டைப் பாடுகின்றன.
இந்த அறைகுறை விட்டுத் தள்ளுவோம்;
இந்த நான்கு அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கு உண்மையில் அறிவு நாணயம், இறையச்சம் என்னும் ஆன்மிக பண்புநலன் கடுகளவேணும் இருந்தால், உண்மை உணர்வு எள் முனையளவேணும் தத்தம் உள்ளத்தே குடிகொண்டிருந்தால், எந்தக் கருப்புச் சட்டை இளைஞர் யாரிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு யார்யாரை எந்த மதத்தில் இருந்து எந்த எந்த மதத்திற்கு எப்போது மாற்றினார்கள் என்பதை இந்த மலைத்திரு நாட்டிற்கு மட்டுமல்ல; உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவிர, இதுகுறித்து உடனே காவல் துறையிடம் புகார் அளிக்கவும் வேண்டும். அப்படி இல்லை யென்றால், இந்த நான்கு தரப்பினரும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த நாட்டில் சுயமரியாதைக் கருத்தை ஏன் பேசக்கூடாது?

மலாயாக் காலத்தில் இருந்து இன்றைய நவீன மலேசியாவரை, இந்து சமய வழிபாட்டு முறைக்கோ அல்லது இந்து பக்தர்களுக்கோ எந்த வகையிலாவது ஒரு சிறிய அளவாவது குந்தகத்தை திராவிடக் கொள்கையினர் ஏற்பத்தினர் என்று எவராவது குறிப்பிட முடியுமா?
அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்றும் பிராமணர்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக எவரும் கருதவேண்டாம் என்று பிராமண ஆதிக்கத்தைதான் எதிர்த்து வருகின்றனர் சுயமரியாதைக் கொள்கையினர் என்ற உண்மையைக்கூட இவகளால் உணர முடியாமல் இருப்பது ஏன்?.
ஆலயங்களில் உண்டியல் கணக்கை மாற்றி எழுதுவது யார்? ஆலய நிருவாகக் குழுவில் குடும்ப உறுப்பினர்களை, அல்லது சாதிக்காரர்களை அல்லது வேண்டியவர்களை மட்டும் அமர்த்திக் கொண்டு சுயநலத்தோடு செயல்படுவது யார்? சாமி சிலை கருங்கல்லில் வடிக்கப்பட்டு இருந்தால் அதைப் பெயர்த்துவிட்டு அடியில் இருக்கும் ஐம்பொன் தகடுகளை திருடுவது யார்? சாமி சிலை தங்கத்தால் அல்லது ஐம்பொன்னால் இருந்தால் அதைத் திருடுவதுதும் முடியாதுபோனால் கைகால்களை உடைப்பதும் திருடிய சிலையைக் கடத்துவது விற்பது ஆகியவற்றை செய்வது யார் யார்?
இத்துணைபேரும் இந்துக்கள்தானே? அர்ச்சகர் வேலை கொடுத்தால் சாமி சிலைமீதும் அலுவலகத்திலும் இருக்கின்ற பொன்னாபரணங்களை திருட்டுத்தனமாக அடகு வைப்பது; விற்பனை செய்வது பக்தர்கள்-பொதுமக்களுடன் ஆலய நிர்வாகத்தினரையும் ஏமாற்றுவதெல்லாம் யார்? கருப்புச்சட்டைக்காரனா அல்லது காவி உடுப்புக்காரனா?
இப்படிப்பட்ட ஆன்மிகத் திருடர்களைப் பற்றி என்றைக்காவது இந்து சங்கத் தலைவரோ இந்து அதர்ம சிறுமன்றத் தலைவரோ ஆகம அணி என்னும் பெயரில் ஒண்டிக்கட்டையாக நொண்டி ஆட்டம் ஆடும் தனிநபரோ விமர்சனமோ அல்லது கருத்தோத் தெரிவித்தது உண்டா?

இந்து வழக்கறிஞர் மன்றத் தலைவர் பொதுநல வழக்கு தொடர்ந்ததுண்டா?
எல்லாவற்றையும் கடந்துபோகும் நீங்கள், கருப்புச் சட்டையைப் பார்த்தாலே-சுயமரியாதை உணர்வாளரைக் கண்டாலே உங்கள் கண்கள் கூசுவது ஏன்? சமய உணர்வைவிட சனாதனப் பித்து உங்களை பேயாகப் பிடித்துள்ளதால், ஆரிய அடிமையாகி செய்வது அறியாமல் கறுப்பு என்றாலே சித்தம் கலங்கி பித்துப்பிடித்து அலைகிறீர்கள்.
மலேசியத் திருநாட்டில் சுயமரியாதைக் கொள்கையாளர்கள் ஒரு விழுக்காடுகூட இல்லை; நீங்கள் செம்மையான சமயவாதியராக இருந்தால், கருப்புச்சட்டைக்காரர்களின் பகுத்தறிவால் உங்களின் வலிமைமிகு ஆன்மிகத்தை என்ன செய்துவிட முடியும்?
அவர்கள் முன் வைக்கும் கருத்திற்கு எதிர்க்கருத்தை எடுத்துவைக்க உங்களிடம் சரக்கும் சாரமும் இல்லை யென்றால் விலகி நில்லுங்கள். அதற்காக, ருக்குன் நெகாரா கோட்பாட்டின் பின்னால் ஒளிந்துகொண்டு பழிசொல்வது என்ன நியாயம்?
மலேசியாவின் பாரம்பரிய சமயமான இந்து சங்கத்தைத் தோற்றுவித்த அருட்செல்வர் பரமானாந்தம் முதல் டத்தோ அ.வைத்திலிங்கம் வரை எல்லாத் தலைவர்களும் இந்து சமய வளர்ச்சிக்கும் இந்து மக்களின் மேம்பாட்டிற்கும்தான் பாடுபட்டார்களேத் தவிர, இப்பொழுது இருக்கும் தலைமை, முணுக்கென்றால் போதும்-மூச்சு விட்டால் போதும் சனாதனம்-சனாதனம் என்று ஒப்பாறி வைப்பது போலில்லை.
இட்டுக்கட்டப்பட்ட இந்து சமயத்தில் பிராமணர்கள் தங்களின் மேலாண்மையை நிறுவுவதற்காக கற்பித்ததுதான் சனாதனம்.
சனாதனம் என்றால், நிலையானது-மாறாதது என்று பம்மாத்து புரிகின்றனர். அது உண்மை யெனில், பிராமணர்கள் எல்லாம் ஒரு கையில் தர்ப்பைப்புல்லையும் மறுகையில் அர்ச்சனைத் தட்டையும் ஏந்தி வண்ணம், அந்தமட்டில் தங்களை வரையறுத்துக் கொள்ள வேண்டியதுதானே?
பின் எப்படி கடல் கடந்து தூதரக அதிகாரப் பொறுப்பை ஏற்க முடியும்? உயர் நீதிமன்ற-உச்ச நீதிமன்ற பதவிகள் ஏன்? ஏனைய அரச-தனியார் உயர் பதவிகள் எதற்கு? எனவே, சனாதனம் என்பது எந்நாளும் மாறாதது-அந்த நாள் முதல் இந்த நாள் வரை அனைத்தும் நிலையானது என்பதெல்லாம், பார்ப்பனர்கள் உங்களையும் எங்களையும் ஏமாற்ற எடுத்துவிடும் சரடுகள்.
சனாதனத்தின் முக்கியமான கொள்கை, பாகிஸ்தான்-ஆஃப்கானிஸ்தான்-வங்கதேசம்-பூட்டான்-நேப்பாளம்- முடிந்தால் மியன்மார் ஆகிய நாடுகளை உள்ளடக்கி அகண்ட பாரதம் என்னும் இந்து ராஷ்ட்ராவை(தேசத்தை) உருவாக்க வேண்டும் என்பதுதான்; அதுதான் பார்ப்பனர்களின் ஆழமான கொள்கை.
அதற்கு முதல் கட்டமாக, சுதந்திர இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க பார்ப்பனர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு மோகன் தாஸ் காந்தி ஒப்புக்கொள்ளவில்லை; அதனால்தான் அவரைத் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த-சனாதன கோட்பாட்டின்படி நாதுராம் விநாய கோட்சே சுட்டுக் கொன்றான்.

காந்தியை சுட்டுக்கொன்ற பொழுது, கோட்சே தன் வலக் கையில் முஸ்லிம் என்று பச்சைக் குத்தி இருந்தான். அதுவும் பலரின் கண்ணிலும் பட்டென தெரியும்படி;
குதிரை கீழேத் தள்ளியுடன் வளர்த்த வீரனையே எட்டி உதைத்தக் கதையாக, காந்தியைக் கொன்றதுடன், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று பொய்யான தகவலைப் பரப்பி, அதன்வழி இந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவது கோட்சேவின் குயுக்தியாக இருந்துள்ளது.
அதை உடனே அடையாளம் கண்ட மௌண்ட் பேட்டன் பிரபு, டில்லி வானொலியில் காந்தியைக் கொன்றது முஸ்லிம் அல்ல; ஓர் இந்துதான் என்று அறிவித்து பதற்றத்தைத் தணித்தார்.
அவரைப்போல தென்புலத்தில் சென்னை மாகாண தலைநகர வானொலியில் பேசிய தந்தை பெரியார், காந்தியை இஸ்லாமியர் கொல்லவில்லை; எனவே, மக்கள் அனைவரும் பொறுமைகாக்க வேண்டும் என்று கேட்டு அமைதியை ஏற்படுத்தினார்.
மௌண்ட பேட்டனாவவது ஓர் இந்துதான் காந்தியைக் கொன்றது என்றார். பெரியார் அதைக்கூட குறிப்பிடவில்லை. பிராமணர்கள்மீது பெரியாருக்கு தனி வஞ்சகம் இருந்திருந்தால், உண்மையை உரக்கச்சொல்லி அந்த சமுதாயத்திற்கு எதிரான மனநிலையை கொதிநிலைக்கு கொண்டு சென்றிருக்க முடியும்.
அந்த மனிதநேயத் தலைவருக்கு எந்நாளும் தோன்றாத எண்ணம் அது; தமிழர்கள் கள் அருந்தக்கூடாது என்பதற்காக தன் தோட்டத்தில் இருந்த் 500 தென்னை மரங்களை காந்தியார் சொல்லையும் மீறி வெட்டிச் சாய்த்தவர் தந்தை பெரியார். ஆசியாவிலேயே பெண்களுக்காக பொறியியல் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய இயக்கம் திராவிடர் இயக்கம்.
இந்த உண்மை யெல்லாம் இந்துசங்கத் தலைவரின் சிந்தைக்கு எட்டாமல் போனது எப்படி? சமுதாயத்தில் கருப்பு மெழுகுவர்த்தியைப் போலத் திகழும் கருப்புச் சட்டைக்காரர்களைப் பார்த்து மதமாற்றுக்காரர்கள் என்று சொல்ல இவருக்கு எப்படி மனம் வந்தது?
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தைப் பற்றி ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.
கர்னல் கரு.சாத்தையா உருவாக்கிய அந்தப் பேரியாக்கம், பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரணின் ஆளுகைக்குள் இருந்தவரை, இந்து சமய மறுமலர்ச்சி இயக்கமாக இருந்தது மலேசிய இந்து தர்ம மாமன்றம் என்பதை எத்தனை முறை சொன்னாலும் தகும்?
ஆனால், இராதாகிருஷ்ணன் பொறுப்புக்கு வந்தபின் அது இந்து அதர்ம குறுமன்றமாக குறுகிவிட்டது.

திருவள்ளுவரை ஸ்ரீ வள்ளுவ நாயனார் என்று சளைக்காமல் எழுதும் இவருக்கு, நாயன்மார் பெருமக்களின் வரலாறும் தெரியவில்லை; வள்ளுவரைப் பற்றியும் புரியவில்லை; மொத்தத்தில் சமய ஞானமும் இல்லை; சமூக நோக்கும் இல்லை; இருப்பதெல்லாம் பார்ப்பனர்களின் பாதந்தாங்கி அவர்கள் வகுத்த சனாதன கூப்பாட்டை ஒப்புவிக்கும் வாய்ப்பாட்டு புத்திதான்.
அதனால்தான், பகுத்தறிவு இளைஞர் கருத்தரங்கிற்கு தடைவிதிக்க வேண்டும். காரணம், 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழுக்கு எதிராகப் பேசினார் என்று பச்சைப் பொய்யை மனங்கூசாமல் சொல்லி இருக்கிறார்.
சமய அமைப்புகளின் தலைவர்கள் எல்லாம், இப்படி மனமறிந்து பொய்யுரைக்கும் மதவாதிகளாக மாறினால், சமுதாயம் உய்யும் வழிதான் என்ன?
கணியன் பூங்குன்றனாரின் பாடலில் இருந்து ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்னும் ஒற்றை வரியை மட்டும்தான் தானாற்றிய உரைக்கு தலைப்பாகக் கொண்டார் தொல்.திருமாவளவன்.
இன்றைய 21-ஆம் நூற்றாண்டிலும் சாதிக் கொடுமைக்கும் தீண்டாமைக்கும் ஆளாகி வாழ்வதால், யாவரும் கேளிர் என்பது மெய்ப்படும் நாள் எந்த நாளோ என்றும், வெறுமனே ஐநா மன்றத்தில் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்பதால் மட்டும் யாரும் யாருக்கும் கேளிராவதில்ல்; அதைப்போல எல்லா ஊரும் எல்லாருக்கும் சொந்த ஊராவதில்லை என்றெல்லாம் பேசினார்.
வேறு எவரையும்விட, இந்தச் சொற்றொடரின் உள்ளார்ந்த பொருள் அவருக்கு நன்கு தெரியும். பட்டியல் இன மக்களின் நாயகராக விளங்கும் அவருக்கு சாதிக் கொடுமையின் தீவலி நன்கு தெரியும்.
திருமாவளவன், இப்படி பேசிய பேச்சுதான் தமிழுக்கு எதிரான பேசசு என்றும் அதனால், பன்னாட்டு இளைஞர் சுயமரியாதைக் கருத்தரங்கு இங்கு நடைபெறக் கூடாதென்றும் உளறிக் கொட்டியுள்ளார் இராதாகிருஷ்ணன்.
முழங்காலையும் மொட்டைத் தலையையும் பசை தடவி ஒட்டப்பார்க்கும் ராதாகிருஷ்ணனுக்கு, பொய்யைக்கூட ஒழுங்காகச் சொல்லத் தெரியவில்லை.
மூன்றாவதாக, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம், ‘வெற்றிவேல் முருகனுக்கு’ப் புகழ் அருண் துரைசாமி, தமிழர்களுக்கு எதிராக காழ்ப்புடன் செயல்படக்கூடியவர். கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு எதிராக பெரிதாக மார்தட்டிய இந்த அருண், கடைசிவரை ‘வெற்றிவேல் முருகனுக்கு’ என்று இருபது, இருபத்தைந்து தடவை சொன்னாரேத் தவிர, உருப்படியாக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை; சொல்ல வகையில்லை.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இங்கு எப்படி பேச முடியும் என்று, வெளிநாட்டில் இருந்து வந்தவருக்குப் பிறந்தவரான அருண் துரைசாமி கேட்பது விநோதம்தான்.
ஒரு தமிழரான தங்க கணேசன் இந்து சங்க தலைவராக வரமுடியாதபடி என்னென்ன குறுக்குத்தனங்களைப் புரிந்தார் இந்த அருண் துரைசாமி என்பது அனைவருக்கும் தெரியும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இங்கு பேசினால் இந்த அருணுக்கு என்ன ஆனது; வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அன்றாடம் நூற்றுக் கணக்கில் இங்கு பேசிக் கொண்டிருக்கும் நிலையில், சுயமரியாதை உணர்வாளர்களும் பகுத்தறிவு சிந்தனையாளர்களும் மட்டும் பேசினால் ஆகாது என்பதா?

இதைக்கேட்க இந்த அருண் யார்? ஆகம அணி என்றால், அந்த அணியில் எத்தனைப் பேர் உள்ளனர், சங்கப் பதிவகத்தில் (Registrar of Societies) ஆகம அணி பதியப்பட்டுள்ளதா? இந்த அமைப்பின் தலைவர்-செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் யார்?
என்னைப் பொறுத்தவரை ஒற்றை மனிதரான அருண் துரைசாமி மட்டுமே ஆகம அணியென பம்மாத்து காட்டிவருவதாகத் தெரிகிறது. இறைவன்மீது நம்பிக்கை வைத்தல் என்பது ஒரு கோட்பாடுதானேத் தவிர, அது அரசியல் சட்டம் அல்ல; தவிர, இது கோட்பாடா அல்லது சட்டமா என்பது பொருட்டல்ல; அதற்கு எதிராக ஒருவரும் பேசுவதுமில்லை.
இந்த நாட்டில் மட்டும் அல்ல; எந்த நாட்டிலும் நடக்கும் அத்தனை அக்கிரமத்துக்கும் இறைவன்மீது நம்பிக்கை வைப்பவர்கள்தான் காரணம் என்பது அருணுக்கு நிச்சயம் உறைக்காது;
நான்காவதாக, ராஜு குப்பன்;
உண்மையில் இவர் ஒரு வழக்கறிஞரா, சட்டம் படித்தவரா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது. பகுத்தறிவு இளைஞர்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்று இவர் சொல்வதை, மலேசிய இந்திய சமுதாயத்திற்கு மெய்ப்பிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், தான் உரைத்த பொய்யை, அபாண்டத்தை, அக்கிரமத்தை ஒப்புக் கொண்டு மலேசிய இந்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு, தகுதியுள்ள ஒருவர் அந்தப் பதவிக்கு வர ஏதுவாக வழிவிட வேண்டும்.
இன்று மலேசிய இந்திய சமுதாயத்தில் ஏகமாக பிரதிபலிக்கும் ஒரு சிக்கல் ஆலய உடைப்புப் பிரச்சினை; இதற்குக் காரணம் அடுத்தவர் இடத்தில் ஆலயத்தை எழுப்பியதுதான்.

ஊரார் இடத்தில் ஆலயத்தை கட்டிக் கொண்டு சண்டித்தனம் புரிவதைப் பற்றியோ இதனால் மலேசியத் தமிழர்தம் அரசியலிலும் ஆன்மிகத்திலும் சலசலப்பு உண்டுபண்ணுவது பற்றியோ நூற்றாண்டு பழமை மிக்க ஆலயம் என்று வெற்று ஜம்பம் புரிவதுபற்றியோ ஓர் அறிக்கைகூட வெளியிட வழியும் வகையும் இல்லாமல், பகுத்தறிவு இளைஞர்கள் மதமாற்றக்காரர்கள் என்று கூற உங்கள் நெஞ்சு சுடவில்லையா?
இப்படி பொய் பேசுவதுதான் இவர் அறிந்த சட்ட அறிவும் இந்து தர்மமுமா?
நான் நேரடியாகக் கேட்கிறேன். மற்ற மொழிக்காரர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; தமிழினத்தில் இருக்கிற இஸ்லாமியர்கள் எல்லாம் அரபு மண்ணில் இருந்து வந்தவர்களா?
நேற்றுவரை சைவர்களாகவும் சமணர்களாகவும் பௌத்தர்களாகவும் நம்மோடு வாழ்ந்த அவர்கள் ஏன் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதைப் பற்றி என்றாவது சிந்திக்கத் தெரிந்ததா?
அதைப்போலவே கிறித்துவர்களும்.
சனாதனப் பித்து தலைக்கேறி தலைகால் தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். சதிராட்டம் ஆடுபவர்களின் கொட்டம் ஒடுங்கும் நாள், சமையும் ஒரு நாள்.
