🔊To listen to this news in Tamil, Please select the text.
தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய “மெண்தெகா தெர்பாங்” (Mentega Terbang) திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு எதிராக இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
மற்றவர்களின் மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டதாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும், மெண்தெகா தெர்பாங் திரைப்படத்தின் இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான 32 வயது முஹமட் கைரி அன்வார் ஜெய்லானியும், தயாரிப்பாளரான 37 வயது டான் மெங் கெங்கும் தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
கடந்தாண்டு, பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, நண்பகல் மணி 12.34 வாக்கில், கோலாலம்பூர், ஜாலான் செமாராக் ஆப்பி, டயமண்ட் ரீஜென்சியில், அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 298-வது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிரான குற்றம்சாட்டப்பட்டுள்ள வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓர் ஆண்டு காலம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தனிநபர் உத்தரவாதத்துடன், கைரியை, ஆறாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், டானை ஆறாயிரத்து 500 ரிங்கிட் உத்தரவாத தொகையிலும் இன்று விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னதாக, கடந்தாண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி, மெண்தெகா தெர்பாங் திரைப்படத்தை மலேசியாவில் திரையிடுவதற்கு, புத்ராஜெயா தடை விதித்தது.
அனோமலிஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மெண்டேகா டெர்பாங் திரைப்படம், தாயின் உடல்நலம் மோசமடைந்ததால், மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையை ஆர்வத்துடன் ஆராயும் 15 வயது ஆயிஷாவை சுற்றி சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், அது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது எனக் கூறி, மூஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.