29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

அன்வார் இப்ராகிம்:சிறை முதல் பிரதமர் வரை முத்தரசனின் நூல் வெளியீடு கண்டது!

🔥 Views : 5
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

கோலாலம்பூர், பிப்.16:
கடந்த நூற்றாண்டின் நான்காவது காலாண்டு, இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டு என ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கான நாட்டின் மைய அரசியலை பொதிய வைத்து ‘அன்வார் இப்ராகிம்-சிறை முதல் பிரதமர் வரை’ என்னும் பெயரில் அரசியல் விமர்சகர்-வழக்கறிஞர்-மூத்த பத்திரிகையாளர்-நூலாசிரியர் என்னும் பரிமாணக் கூறுகளை தன்னகத்தேக் கொண்டுள்ள இரா. முத்தரசன் இயற்றிய நூல், மலேசியாவின் பாரம்பரிய தலைநகரின் வரலாற்று அடையாளங்களுள் ஒன்றான ‘ராயல் சிலாங்கூர் கிளப்’-இல் நேற்று நடைபெற்றது.

புதிய தலைமுறையினருக்கும் இளம் பத்திரிகையாளர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் அரிய தகவலையும் அரசியல் நிகழ்வுகளையும் நூலாசிரியர் பாங்குற தொகுத்திருக்கிறார்.

இது பெயருக்குத்தான் அன்வார் இப்ராகிமைப் பற்றிய நூலேத் தவிர, உண்மையில் இது மலேசிய தேசிய அரசியலை விவரிக்கும் நூல்; இருந்தபோதும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் கல்லூரி காலம், அவர் வழிநடத்திய அபிம் இயக்கம், பின்னர் துன் மகாதீரின் தூண்டிலில் சிக்கிய அன்வார் நேரடி அரசியலில் ஈடுபட்டது, பின் அதே மகாதீருக்கும் அவரின் அடிப்பொடியைப் போன்ற டான்ஸ்ரீ ரஃபிடா அசீசுக்கும் டான்ஸ்ரீ டாக்டர் சித்தி சஹாரா மூலம் அன்வார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம், அதன் பின்னர் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான அன்வார் சிறைவாசம் சென்றது முதல் இன்றைய ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் வரை என அன்வாரைப் பற்றிய தகவல் பெட்டகமாகவும் இந்நூல் உருப்பெற்றுள்ளது.

2007 ஹிண்ட்ராஃப் எழுச்சிக்குப் பின் நடைபெற்ற 2008 மார்ச் 08 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழந்ததுடன் ஐந்து மாநிலங்களின் ஆட்சியையும் பறிகொடுத்தது.

அந்தக் காலக் கட்டத்தில் அன்வாரைப் பற்றிய இந்த நூலை எழுதத் தொடங்கிய முத்தரசன், பல்வேறு சூழல் காரணமாக, தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு, ஒத்திவைத்து ஒத்திவைத்து இப்போது 16 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேற்றி இருக்கிறார்; ஆனாலும், தாமதத்திற்கு வட்டியும் முதலுமாக சிறப்பான வெளியீடாகத் தயாரித்திருக்கிறார்.

அன்வார் பிரதமர் ஆனதும், அந்த சூட்டோடு இந்த நூலையும் எழுதி முடித்திட முத்தரசன் கங்கணம் கொண்டிருப்பார் எனத் தெரிகிறது. அன்வரைப் பற்றிய எந்த முக்கிய தகவலும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தி இருக்கிறார். பிரதமர் ஆனதும் ஓரோர் அம்சங்களில் அவர்மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியையும் இந்த நூலில் படம்பிடித்திருப்பது, முத்தரசனின் எழுத்தாண்மைக்கும் பக்க சார்பின்மைக்கும் தக்க சான்று.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, ஓர் இலக்கிய மாலையைப் போலன்றி, முத்தரசனின் நட்பு வட்டம் கூட்டம் சேர்ந்ததைப் போன்றிருந்தது.

2022 நவம்பர் 24-இல் ஒற்றுமை அரசு உருவாகும்வரை எதிரும் புதிருமாக இருந்த மஇகா தரப்பும் ஜசெக-பிகேஆர் கட்சிகளும் இப்போது கரம்கோத்திருப்பதை, இந்த நூல் வெளியீட்டு நிகழ்விலும் பிரதிபலிக்கச் செய்திருப்பது முத்தரசனின் சாமர்த்தியத்திற்கு தக்க சான்று.

அவர் ஏற்புரை ஆற்றுவதற்கு முன்னம் வாழ்த்துரை வழங்கிய டத்தோஸ்ரீ மு. சரவணன், அன்வார், அவரைப் பற்றிய நூல், நூலை ஆக்கிய முத்தரசன் குறித்தெல்லாம் நல்ல வண்ணம் கருத்தைப் பதிவு செய்தார்.

இப்பொழுதெல்லாம் பழைய சரவணனைக் காண முடிவதில்லை; நல்லதுதான்; அவர் கனிந்து வருகிறார்.

டத்தோ எல். காந்தன், டத்தோஸ்ரீ சி.கி. தேவமணி, முரசு நெடுமாறன் உள்ளிட்ட ஏராளமான பெரிய மனிதர்கள் அரசியல்-இலக்கிய எல்லைகளில் இருந்து கலந்து கொண்டனர். காலமறிந்து வெளியிடப்பட்டுள்ள இந்நூல், காலம் முழுதும் நிலைத்திருக்கும். மொத்தத்த்தில் மலேசியத் தமிழ் இலக்கியப் பூங்காவில் மணம் பரப்ப இன்னொரு பூ, பூத்துள்ளது.

மீண்டும் குறிப்பிடத் தோன்றுகிறது; இதுவோர் இலக்கிய-நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என்பதைக் காட்டிலும் முத்தரசனின் அன்பர் வட்டம், வட்டமிட்டதைப் போன்றிருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles