
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், பிப்.14:
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்-புவான்ஸ்ரீ சுசிதா இணையரின் மகள் தனுஷா-விஷால் ரூபர்ன் ஆகியோரின் திருமணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிப்ரவரி 11-ஆம் நாள் பத்துமலை வெங்கடாஜலபதி ஆலயத்தில் நடைபெற்றது.
அதில் மஇகா தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், திருமுருக பக்தர்கள் ஆகியோருடன் பல்துறைசார் பெருமனிதர்கள், கட்சித் தலைவர்கள், கவிப் பேரரசு வைரமுத்து உள்ளிட்ட அயலக பிரபலங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழை இலையில், அதுவும் அனைவருக்கும் தலைவாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த நடிகரும் சமையல் வல்லுநருமான ரங்கராஜன் தலைமையில் தமிழர்தம் பாரம்பரிய உணவு முறையான அவியல், பொறியல், மசியல், துவையல் என்னும் முறையில் சமைக்கப்பட்ட சுவைமிகு உணவை சுவைத்த அனைவரும் உண்மையில் ஒரு திருமண பந்திக்கான பழங்கால பரவசத்தை அடைந்தனர்.
இதன் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை Sofitel Kuala Lumpur Damansara என்னும் இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரங்கராஜன், கடந்த ஒன்பது மாதங்களாக திட்டமிட்டு இந்தத் திருமண விருந்தோம்பலை நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டார்.
மஇகா தேசியத் தலைவரின் அரசியல்-ஊடக செயலாளர் சிவசுப்பிரமணியன், திருமணத்திற்கான ஏனைய ஏற்பாடுகளை மிக நேர்த்தியாக நிறைவேற்றிய குமரேசன் ஆகியோரும் இந்த ஊடகக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு உள்ளிட்ட அறுசுவையில் துவர்ப்பும் கசப்பும் நீங்கலாக மற்ற நாற்சுவையில் பரிமாறப்பட்ட விருந்தோம்பலில், திருநெல்வேலி கோதுமை அல்வா, ஜாங்கிரி, ரசமலாய், பூப்போன்ற மெல்லிய குட்டி பரோட்டா(ரொட்டி ச்சானாய்), திண்டுக்கல் பாணியில் சைவ பிரியாணி, வட்ட பால்கோவா, பருப்பு-நெய், முருங்கைக் காய்-சின்ன வெங்காய சாம்பார், கார குழம்பு, மைசூர் ரசம், தயிர் பச்சடி, தஞ்சை பீன்ஸ் குசிலி, நாகர்கோயில் அவியல், குண்டூர் பேபிகான் ச்சில்லி, காரைக்குடி செட்டிநாட்டு மண்டி, கேரள அன்னாசி பச்சடி, ஜவ்வரிசி வடை, கேரள அடப்பிரதமன் பாயாசம்-அப்பளம், கோங்க்ரா ஊறுகாய், விருப்பாச்சி பழம், பீடா, பனிக்கூழ் உள்ளிட்ட நவீன உணவு வகை யாவும் பாரம்பரிய முறையில் பரிமாறப்பட்டதாக ரங்கராஜன் தெரிவித்தார்.
ரங்கராஜன் தலைமையில் அறுபது பேர் கொண்ட குழுவினர் இந்தத் திருமண விருந்திற்கு ஏற்பாடு செய்தனர். வந்தவர்கள், பாத்திரங்களையும் பருப்பு உள்ளிட்ட தானியங்களையும் உடன் கொண்டு வந்துள்ளனர். உள்நாட்டு லிட்டில் இந்தியா கேட்டரர்ஸ் குழுவினரும் பரிமாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு மேலும் 450 பேரும் ஈடுபட்டு பத்துமலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பந்தி பரவசத்தை ஏற்படுத்தினர்.
ஞாயிற்றுக் கிழமை காலை முதலே நாடு முழுவதிலும் இருந்து மஇகா-வினர் திரள ஆரம்பித்ததால், தைப் பூச விழாத் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வாகன அணி வகுப்பும் மக்கள் திரளும் பத்துமலை வளாகத்தை திக்குமுக்காட வைத்தன.
பெங்களூருவைச் சேர்ந்த ரவி என்பவர் மூலம் மஇகா தேசியத் தலைவரின் அறிமுகமும் திருமண விருந்திற்கான அழைப்பும் கிடைத்ததாக ரங்கராஜன் மேலும் சொன்னார்.



