24.8 C
Kuala Lumpur
Monday, March 24, 2025

Vetri

அனைவருக்கும் உலக தாய்மொழி நாள் வாழ்த்து: மஇகா தேசியத் தலைவர்-எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

🔊To listen to this news in Tamil, Please select the text.

‘பன்மொழிக் கல்வி என்பது புதிய தலைமுறையினருக்கு இடையேயான கற்றலின் தூண்’ என்பதை, 2024 பன்னாட்டு தாய்மொழி தினத்திற்கான கருத்தாக யுனெஸ்கோ மன்றம் பிரகடனப் படுத்தி உள்ளது.

அந்த வகையில், பல இன-பன்மொழி-பல்கலாச்சார-பல சமயக் கூறுகளைக் கொண்ட மலேசிய கூட்டு சமுதாய மக்கள் அனைவரும் தத்தம் தாய்மொழியைப் போற்றவும் அதேவேளை பிற மொழிகளை மதிக்கவும் உறுதி ஏற்போம் என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் தாய் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்னும் சிந்தனையை உள்ளீடாக வைத்து ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள், உலகத் தாய்மொழி தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது.

மனிதர்கள் நாகரிக வாழ்வை எட்டி, நவீன கருவிகளைக் கையாண்ட போதிலும் ஆண்டுதோறும் எண்ணற்ற மொழிகள் வழக்கொழிந்து வருகின்றன.

உலக மயமாதல், சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினர் ஒடுக்குவது, தம் தாய்மொழி குறித்த அக்கறையின்மை என்றெல்லாம் மொழிகள் அழிவதற்கான பல காரணங்களை ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு பட்டியல் இட்டுள்ளது.

இவ்வாறு பல்லாயிரக் கணக்கான மொழிகள் அழியும் நிலை, இனியும் தொடரக் கூடாது என்பதற்காக இந்தத் தாய்மொழி நாள் வடிவமைக்கப் பட்டுள்ளது. கடந்த 20-ஆம் நூற்றாண்டின் நிறைவுக் கட்டத்தில் செப்பம்பெற்ற இந்த உலகத் தாய் மொழி நாளுக்குரிய வரலாறு நம் ஆசிய பெருநிலத்திலேயே கருக்கொண்டது என்பது நமக்கெல்லாம் பெருமைதான்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் பிரிட்டன் காலணி ஆட்சியாளர்கள் மெல்லமெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். அந்த வகையில் முதன் முதலில் இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்கிவிட்டு, மற்ற நாடுகளுக்கு காலப்போக்கில் கட்டம் கட்டமாக விடுதலை அளிக்க முடிவு செய்தனர்.

இந்தியா செழிப்பு நிறைந்த மண்டலமாக இருந்தாலும் வறட்சி, புயல்-வெள்ளம் போன்ற சமயங்களில் அந்தப் பெருநாட்டை நிர்வகிப்பதில் அதிகமான சிரமத்தை ஆங்கில ஆட்சியாளர்கள் எதிர்கொண்டனர். அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டை நிர்வாகம் செய்ய திணறியது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் மக்களின் விடுதலைப் போராட்டம் உச்சத்தைத் தொட்டது. ஆனாலும், இரு உலகப் போர்கள் குறுக்கிட்டதால், அவர்கள் அதில் கவனம் செலுத்தினர்.

1930-க்குப் பின் இந்திய விடுதலை குறித்த பேச்சு அழுத்தமாக எழுந்த நேரத்தில், பெரும்பான்மை சமயத்தினர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால், அச்சம் கொண்ட சிறுபான்மை சமயத்தினர் பிரிந்து தனியாக சென்றனர். முகமது அலி ஜின்னா தலைமையில் பாக்கிஸ்தான் என்னும் நாடு உருவானது.

சமய அடிப்படையில் பிரிந்த பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான்-மேற்கு பாகிஸ்தான் என இருமண்டலங்களாக விளங்கியது.

ஆஃப்கானிஸ்தானை ஒட்டிய மேற்கு பாகிஸ்தானின் வாழ்ந்த மக்கள் உருது மொழி பேசுபவர்களாகவும் மியன்மாரை ஒட்டிய கிழக்கு பாகிஸ்தானில் வாழ்ந்தவர்கள் வங்கமொழி பேசுபவர்களாகவும் இருந்தனர். இரு தரப்பினரும் ஒரே சமயத்தைப் பின்பற்றினாலும் பெரும்பான்மை உருது பாகிஸ்தானியர்கள் சிறுபான்மை வங்காள பாக்கிஸ்தானியர்கள்மீது மேலாண்மை புரிய ஆரம்பித்தனர்.

இதன் விளைவாக எழுந்த முறுகல் நிலை மேலும் மேலும் முறுக்கேற, ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் வரை சென்றது. அந்த வகையில், வங்கமொழிக்கும் வங்காள மக்களுக்கும் எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்றனர்.

அவர்களில் நான்கு பேர், 1952 பிப்ரவரி 21-ஆம் நாளில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாயினர். அதன்பிறகு நிலைமை மேலும் முற்றவே, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டன. குறிப்பாக, இந்தியா கிழக்குப் பாகிஸ்தானுக்கு அதரவளித்து வங்காள தேசம் என்னும் நாடு உருவாக துணை போனது.

ஒரு நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட பிப்ரவரி 21- சம்பவம், துன்ப நிகழ்வாக இருந்தாலும் தங்களின் தாய்மொழிக்கான உயிர்நீத்த அந்த வீர மாணவர்களின் மாண்பைப் போற்றும் வகையில் இந்த நாளை உலகத் தாய்மொழி தினமாக யுனெஸ்கோ பிரகடனம் செய்துள்ளது.

இதன் அடைப்படையில், மலேசியர்களாகிய நாமும் உலக மக்களைப் போல சொந்த மொழியைப் போற்றி மற்ற மொழிகளை மதிக்கும் சிந்தனையை நம் மனதில் பதிய வைப்போம் என்று மஇகா தேசியத் தலைவருமான எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தன்னுடைய உலக தாய்மொழி நாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலெ.சிவசுப்பிரமணியன்
தேசியத் தலைவரின்
அரசியல்-பத்திரிகைச் செயலாளர்
மஇகா தலைமையகம்
கோலாலம்பூர்
20-02-2024

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles