
🔊To listen to this news in Tamil, Please select the text.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு
துறைகளுக்கிடையே அணுக்கமான ஒத்துழைப்பை பேணுவதன் வாயிலாக
மலேசியா- தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தி அதன்
மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதற்குரிய சூழலை
ஏற்படுத்த முடியும்.
கெடா மாநிலம் அண்டை நாட்டுடன் நீண்ட எல்லையைக்
கொண்டுள்ளதால் இந்த ஒத்துழைப்பு அவசியமானதாக விளங்குகிறது
என்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) கெடா மாநில
இயக்குநர் ஜூராய்னி முகமது யூசுப் கூறினார்.
எல்லைப் பாதுகாப்பு எங்களின் (எம்.கே.என்.) முதன்மை இலக்காக உள்ளது.
ஊடுருவல் நடவடிக்கைகளை சுழியம் அளவுக்கு குறைக்க நாங்கள்
திட்டமிட்டுள்ளோம். இந்த இலக்கை அடைவது சிரமமான பணியாக
இருந்த போதிலும் ஊடுருவலை குறைந்த பட்ச அளவுக்கு குறைப்பதற்கு
நாங்கள் முயன்று வருகிறோம் என அவர் சொன்னார்.
நாட்டிலுள்ள அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களையும் உள்ளடக்கிய
ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் எம்.கே.என். மும்முரமாக ஈடுபட்டு
வருகிறது. உள்துறை அமைச்சு மற்றும் பிரதமர் துறை அமைச்சின்
கீழுள்ள துறைகளுக்கு இடையிலான உறவு மிகவும் சிறப்பாக உள்ளது
என்று அண்மையில் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த
பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய குடிநுழைவுத் துறை, அரச மலேசிய சுங்கத் துறை, போலீஸ்
மற்றும் ஆயுதப் படைகளுக்கு இடையே காணப்படும் அணுக்கமான
ஒத்துழைப்பு மலேசியா-தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு மீறல்
சம்பவங்களை குறைப்பதில் பெரிதும் உதவியுள்ளது என்றார் அவர்.
கெடா மாநிலம் அண்டை நாட்டுடன் தரை, வான் மற்றும் கடல் மார்க்க
நுழைவாயிலைக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இம்மாநிலத்தில்
எல்லைப் பாதுகாப்பு மீது எம்.கே.என். எப்போதும் முன்னுரிமை அளித்து
வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
