
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கூலிம், மே25:
இந்தியா என்னும் நாட்டை நிருவாக ரீதியாக ஆங்கிலேயர்கள் கட்டமைப்பதற்கு பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்னமே படை வலிமையோடும் ராஜாங்க பாட்டையோடும் செம்மாந்து திகழ்ந்த நாடு, தமிழ் நாடு.
அந்தத் தமிழ் நாட்டிற்குள்ளும் சோழ, பாண்டிய, சேரப் பேரரசுகள் எழுச்சியுடன் தொன்மைத் தமிழினத்தை ஆண்டன.
அக்காலத்தே, சோழப் பெருமண்டலத்தைச் சேர்ந்த பெருமன்னன் இராசேந்திரன், நீர்வழி படைக்கலம் நடத்திவந்து, இந்த மலாயா நாட்டின் வடபுலத்து யான் மண்டலத்தில் அரசாட்சி நடத்தினார்.
முதல் தர தேக்கு மரத்தையும் 7-ஆம் தர கருங்கல்லையும் கலம்வழி கொண்டுவந்து பூஜாங் பள்ளத்தாக்கில் நிறுவிய சிவ ஆலயம், இன்று காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
கண்ணில் பட்ட கல்லறை என்னும் நினைவறைகள், அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றைக்கூட, நிகழும் 21-ஆம் நூற்றாண்டு பிறந்ததுமுதல் காண வழியில்லை.
படைநடத்தி மாதக் கணக்கில் கடற்பயணம் மேற்கொண்ட சோழ நாட்டுத் தமிழர்கள், பெண்களை அழைத்துவர வழியில்லாததால், இங்குள்ள சுவர்ணபூமிப் பெண்களை மணம்புரிந்து, பௌத்த சமயமும் சைவ சமயமும் இணைந்த கூட்டு சமுதாயத்தையும் கலவை சமயத்தையும் உருவாக்கினர்.
அந்த வண்ணம், கெடா மண்டலத்தை ஆண்ட சோழப் பிரதிநிதிகளை குறுநில மன்னர்களாக வகைப்படுத்திய இராசேந்திரப் பேரரசன் தாயகம்(தமிழகம்) திரும்பினார்.
அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆதித்த கரிகால் சோழனை வஞ்சகமாகக் கொன்றிருந்தை நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பின்னியிருந்த பெருஞ்சூழ்ச்சியை சமாளிக்க வேண்டி இருந்ததால், கடாரப் பிரதேசத்தின்மீது கவனம் செலுத்த முடியாமல்போனது இராசேந்திரப் பெருமன்னனுக்கு.
அந்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, தமிழர்தம் நிலத்து வழிபாட்டுத் தலங்களைக் கைப்பற்றினர்.
பழனி திருமுருக திருத்தலத்தை தமிழப் பண்டாரங்களிடம் இருந்து பறித்துக் கொண்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.
அதைப்போல, தில்லையம்பலத்து சிவப் பெருந்தலத்தை நிருவகித்துவந்த தமிழ் அந்தனர்களை, ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதைபோல வஞ்சகமாக வெளியேற்றிவிட்டு, தங்களையே தில்லைவாழ் அந்தணர்கள் என இத்திருட்டு புரட்டுக்கூட்டம் பறைசாற்றிக் கொண்டதற்கு இன்றுவரை தீர்வில்லை.
அதேக் காலக்கட்டத்தில் மலாயா – இந்தோனேசியா உள்ளிட்ட இந்த மண்டலத்தில் இசுலாமிய மறுமலர்ச்சி பேரளவில் நிகழ்ந்ததால், இராசேந்திர மாமன்னரால் நியமிக்கப்பட்ட சோழப் பிரதிகள் மதம் மாற வேண்டிய சூழல் எழுந்தது.
கடார மண்டலத்தின் 9-ஆவது சோழப் பிரதிநிதி, மதம் மாறி முதல் சுல்தானானார்.
அந்த வரிசையில் வந்தவர்தான் இன்றைய 26-ஆவது சுல்தான்.
ஆக, ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவான தமிழர் பாரம்பரியம் ஏறக்குறைய திசைமாறிய நிலையில், 19-ஆம் நூற்றாண்டில், அந்த அத்தியாயம் மீள புதுப்பிக்கப்பட்டது.
இந்த மண்ணை வளப்படுத்தி, மலாயாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வந்த தோட்டப் பாட்டாளிகளின் பொருளாதார நிலை, பாதாளத்தில்தான் கிடக்கிறது இன்றளவும்.
ஆனாலும், இந்திய சமுதாயம் எல்லா வகையாலும் மீட்சி காண ஒரேவழி கல்வி ஒன்றுதான் என்பதை உணர்ந்த துன் சாமிவேலனாருக்கு இப்பொழுது அவர் உருவாக்கிய பெருங்கல்விச் சாலையான எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்திலேயே அன்னாரின் திருவுருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
சிறு வயதில் கல்விக்காக ஏங்கிய அந்தப் பெருமனிதருக்கு, கல்வியின் அவசியம் நன்கு புரிந்திருந்தது.
அதனால்தான், அவர் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்தப் பன்னாட்டுத் தரத்திலான பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழாவின்போது அவருக்கான சிலை திறக்கப்பட்டுள்ளது; இது, சாலப் பொருத்தம்.
ஒரு தலைமுறைக் காலத்திற்கு இந்திய சமுதாயத்தையும் மஇகா-வையும் ஒருசேர வழிநடத்திய அந்த அரசியல் தலைமகன், மத்தியக் கூட்டரசிலும் தமிழினத்தைப் பிரதிநிதித்தவர்.
அவரின் அரசியல் வழித்தோன்றலினரான டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் டத்தோஸ்ரீ சரவணனும் செய்துள்ள இந்த ஏற்பாடு இன்னும்பொருத்தமானது.
மொத்தத்தில் தமிழர்தம் பாரம்பரிய தொல்பெருமைக்கு கட்டியம்கூறும் அதே யான் மண்டலத்தில்-கெடாரத்தில் நிறுவப்பட்டடுள்ள அரசியல் அடையாளமாக துன் ச.சாமிவேலனாரின் சிலை காலமெல்லாம் பறைசாற்றும்.
இதற்குத் திரைபோட வல்லார் ஒருவரும் இலர்.
வாழ்க தமிழ்!!
