
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், ஜூலை 24:
இடைநிலை பள்ளிகளில் தமிழ்க் கல்விக்கு தொடர்ந்து தடையும் தடங்கலும் ஏற்பட்டு வருவதால், இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்ப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியை முடித்தபின் இடைநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தமிழ்க் கல்வியைத் தொடரமுடியாமல் பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகி, தத்தளித்து வருகின்றனர்.
இந்தச் சிக்கலை அடியோடு களைவதற்கான ஒரேத் தீர்வு, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை கல்வி அமைச்சு கட்டாயமாக்குவதுதான் என்று மலேசிய இந்து சங்கம் வலியுறுத்துவதாக மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்ற உறுப்பினருமான ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில், மலேசிய இந்து சங்கம் இவ்வாரத் தொடக்கத்தில் நடத்திய 47-ஆவது தேசிய ஆண்டுக் கூட்டத்தில் நிறைவேற்றிய ‘ஏழு’ தீர்மானங்களில் 2-ஆவது தீர்மானமே இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பாடத்தைக் கட்டாயம் ஆக்க வேண்டும் என்பதுதான்.

எனவே, ‘மடானி’ முழக்கத்துடன் ஒற்றுமை அரசை வழிநடத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தான் வாக்களித்தபடி இடைநிலைப் பள்ளி-களில் தமிழ், தமிழிலக்கிய பாடங்களை கட்டாயப் பாடமாக கல்வி அமைச்சகம் அறிவிக்கும்படி ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தவிர, ஏற்கெனவே, ஏறக்குறைய ஓராண்டு காலத்திற்குமுன் பிரதமர் இதுகுறித்து அறிவிப்பு செய்திருந்தார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இதே மாதத்தில் நடைபெற்றபொழுது, அதில் திருக்குறளுடன் அதிகாரப்பூர்வ உரை நிகழ்த்திய பிரதமர், இடைநிலைப் பள்ளிகளில், குறிப்பாக நான்காம், ஐந்தாம் படிவங்களில் படிக்கும் மாணவர்கள், தங்களின் எஸ்.பி.எம். தேர்வுக்கான தமிழ் மற்றும் தமிழிலக்கியப் பாடங்களைத் தெரிவுசெய்து படிக்கலாம் என்றார்; மாணவர் எண்ணிக்கைக் குறித்து கவலையில்லை. தவிர, கல்வி அமைச்சருடன் இதுகுறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் பிரதமர் அறிவித்தார்.
பிரதமருக்கு முன்னதாக தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் சுமார் கால் நூற்றாண்டாக மக்கள் பிரதிநிதியாகத் திகழும் டத்தோஸ்ரீ மு.சரவணன் உரை நிகழ்த்தியபொழுது, இதுகுறித்த கோரிக்கையை பிரதரிடம் முன்வைத்தார். ஆனால், இதுவரை இதுகுறைத்த எந்த அறிவிப்பும் வெளிவ்ராதது கவலைக்-கும் வருத்தத்திற்கும் உரியது.
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் குறித்து ஆணை வெளியிடப் பட்டாலும்கூட அதுவும் சிக்கலைத் தீர்ப்பதாக அமையாது; ஏதாவது ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, இடைப்பள்ளிகளில் தமிழ்க் கல்வி குறித்த சிக்கல் காலமும் தொடரவேச் செய்யும்.

அச்சு-இணைய ஊடகத்தில் இதுகுறித்த செய்திகள், தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. தற்பொழுதுகூட, ‘கோல குபு பாரு டத்தோ ஹாஜி கமாருடின் இடைநிலைப் பள்ளி’யில் தமிழ்க் கல்விக்கான தடங்கல் குறித்தச் செய்தி அச்சு ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, மலேசிய இந்து சங்கம் எல்லாவற்றையும் அவதானித்து இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்-தமிழிலக்கியப் பாடங்கள் கட்டாயம் என்ற உத்தரவை பிரதமர் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக வைக்க விரும்புகிறது; இந்த உலகின் சிறந்த மொழி, அதிலும் செம்மொழி தகுதிபெற்றுள்ள 6 மொழிகளில்கூட முதன்மையான மொழியான தமிழுக்கு இந்த அரசு சிறப்பு செய்யும் வகையில் அனைத்து இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ்க் கட்டாயப் பாடம் என்னும் அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிடும்படி பிரதமர் ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
