25.3 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

வங்காள தேசத்தில் இந்து ஆலயங்கள்மீது தாக்குதல்: பிரதமர் அன்வார் குரல்கொடுக்க வேண்டும்!

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலாலம்பூர், ஆக.07:
அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள வங்காள தேசத்தில் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன.
மேலும், சிறுபான்மை மக்களும் தாக்குதலுக்கும் மருட்டலுக்கும் ஆளாகியுள்ள நிலையில் பிரதமர் அன்வார் அதற்காக குரல்கொடுக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவரும் ஹிண்ட்ராப் தலைவருமான பொன். வேதமூர்த்தி அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீன சிக்கலுக்காக அழுத்தமாக குரல்கொடுக்கும் அன்வாரைப் பாராட்டிய பொன். வேதமூர்த்தி, வங்காள தேசத்திலும் கலகக்காரர்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள சிறுபான்மை மக்கள், அவர்களின் வழிபாட்டுத்தலம் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காகவும் குரல்கொடுக்க முன்வர வேண்டும். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வங்காள தேச தொழிலாளர்கள் மலேசியாவில் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகின்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு தொடர்கிறது. இந்தச் சூழலில் அன்வார் இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று இன்று விடுத்த அவசர அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்காக செயல்படும் அமைப்புகள், தம் பாதுகாப்பிற்கான உதவியை மிகவும் எதிர்பார்ப்பதாக வங்காள தேசத்தில் இருந்து வெளிவரும் நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைக்காக குரல் கொடுப்பதில் துணிந்தவர் பிரதமர் அன்வார் என்பதில் மலேசிய மக்களுக்கு ஐயமில்லை; அநீதி எங்கே, யாருக்கு நேர்ந்தாலும் அவர்களுக்காகவும் குரல்கொடுக்க அன்வார் தயங்கமாட்டார். அந்த வகையில், வங்காள தேசத்தில் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு, அங்குவாழும் பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் ஏற்கெனவே தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்து உறுதிசெய்ய வேண்டும் என்றும் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

வங்காள தேசம், குல்னா மண்டலத்தில் உள்ள மெஹர்பூர் என்ற ஊரில் அமைந்துள்ள இந்து ஆலயத்தைத் தாக்கிய கலகக்காரர்கள், தாக்கியபின் தீவைத்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றுள்ளதாக பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

வங்காள தேச மக்கள் தொகையில் 8% அல்லது 13.1 மில்லியனாக இருக்கும் இந்து சமய மக்களின்மீது மாணவர் எதிர்ப்பு திரும்பக்கூடிய சாத்தியம் உள்ளதால், அவர்கள்மீதான தாக்குதலும் பாகுபாடும் அதிகரிக்கக்கூடிய அச்சமும் நிலவுகிறது.

இந்தக் கலவரத்தின் விளைவாக, குறைந்தது இரு இந்து கௌன்சிலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தவிர, இந்துப் பெண்கள் கடத்தப்பட்டுள்ள தகவலும் இந்துக்களின் வியாபார இடங்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ள துர்சம்பவங்களும் மிகவும் கவலை அளிக்கக்கூடியவை என்று பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles