
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், ஆக.17:
வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களுக்கு பிரதமர் அன்வார் குரல் குரல்கொடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான கார்த்திகேசன் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் அன்வார், தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில் வங்க தேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பு குறித்து மலேசிய சிறுபான்மை மக்களான இந்து, கிறிஸ்துவ, பௌத்த சமய மக்களுக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்பது மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபிக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அதன் தகவல் பிரிவுத் தலைவருமான கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன சிக்கலுக்காக தொடர்ந்து அழுத்தமாகக் குரல்கொடுத்துவரும் தலைவரான மலேசிய பிரதமர், வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் கலவரத்தைக் கண்டிப்பதில் அதே முனைப்பைக் காட்டத் தவறிவிட்டார். மாணவர் எழுச்சியைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்லாமிய கலவரக்காரர்கள் வங்கதேசத்து இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பௌத்த சமயத்தினர்மீது இலக்குவைத்து தாக்குகின்றனர்.
அந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இந்துக்கள் நீண்டகாலமாகவே இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் நிலத்தையும் சொத்தையும் அபகரித்தல், ஆள் கடத்தல், பாலியல் அத்துமீறல் ஆகியவற்றை சில இனவாதக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. மனிதத் தன்மையை மதிக்காமல் இவ்வாறு தொடரும் அட்டூழியங்களைப் பற்றி, முக்கிய ஊடகத்தில் தகவல் வெளியாவதில்லை என்பது பெரும் ஏமாற்றத்திற்குரியது.
எனவே, வங்க தேசத்து சிறுபான்மை மக்களான இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பௌத்த மக்கள்மீது ஏவப்படும் வன்முறைக்கு எதிராக, பிரதமர் அன்வார் குரல் கொடுப்பதுடன் இதுகுறித்து கண்டனமும் தெரிவிக்க வேண்டும். தவிர, இத்தகைய சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு குறித்து உறுதிசெய்யும்படி அந்த நாட்டின் இடைக்கால அரசிடம் அன்வார் வலியுறுத்த வேண்டும் என்றும் கார்த்திகேசன் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
