
🔊To listen to this news in Tamil, Please select the text.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 780 நட்சத்திர ஆமைகள், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட மின் சிகரெட்கள் ஆகிய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
அதற்கிடையே, விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கம்போல் பரிசோதித்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சுற்றுலாப் பயணிகளாகச் செல்ல ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் வந்திருந்தனர்.
அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டியை சோதனை செய்த போது, பெட்டிக்குள் ஏதோ லேசாக அசைந்துள்ளது.
அதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அட்டைப் பெட்டியை திறந்து பார்த்த போது, உள்ளே உயிருடன் 780 நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அந்த மூவரின் பயணத்தையும் ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களையும், நட்சத்திர ஆமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுங்க அதிகாரிகள், நட்சத்திர ஆமைகளைப் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.
அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது, சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி, தனது உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 மின் சிகரெட்டுகளை பறிமுதல் செய்து, அப்பயணியை கைது செய்துள்ளனர்.



