
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசியா, இன்று-2024 ஆகஸ்ட் 31-ஆம் நாள், தனது 67-ஆவது ‘மெர்டேக்கா’ தினத்தை(சுதந்திர நாளை)க் கொண்டாடுகிறது.
அரசியல்வாதிகள் இனம்-மதத்தின் பெயரால் நாட்டை எந்த அளவிற்கு பிளவுபடுத்தி இருக்கிறார்கள் என்பதையும் தற்போதைய பிரதமர் பொறுப்பு ஏற்றபின் நிலைமைகள் எவ்வாறெல்லாம் மோசமான கட்டத்தை எட்டியுள்ளன என்பதையும் பார்க்கும்பொழுது, நாட்டின் சாதனைகள்-முன்னேற்றம் குறித்து உண்மையில் எனக்கு ஆர்வம் எழவில்லை; சிறுபான்மை இந்தியச் சமுதாயத்தில் தோன்றி, சட்டத் துறை பின்புலத்தைக் கொண்டிருக்கும் எனக்கு, சுதந்திரத்தின் உண்மையான பொருள்-அதன் சாரம், அரசியல் சாசன விதிகள், சிறுபான்மைக் கண்ணோட்டத்தில் ஜனநாயக சமூகம் குறித்தெல்லாம் என் மனதில் இயல்பாக எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. மலேசியாவில், சுதந்திரம் என்பது, மலாயா-மலாய் என்னும் கண்ணோட்டத்தை மட்டும் பிரதிபலிப்பதாகவும் அது, மலேசியாவில் பாதி அளவிற்கு உள்ள போர்னியோ மண்டல மக்களையும் தீபகற்ப மலாயா சிறுபான்மைச் சமூகங்களையும் அரவணைக்கவில்லை அல்லது முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்த்துகிறது. மெர்டேக்கா குறித்த கருத்தாக்கம், ஓர் ஆரோக்கியமான மலேசிய தேசியக் கண்ணோட்டத்தில் அமையவில்லை.
நாம் உண்மையான மலேசியர்கள் என்றும் அமைதி-நல்லிணக்கத்துடன் ஒருமித்து வாழ்வதாகவும் மற்ற இனங்களின் கலாச்சாரக் கூறுகள்-வாழ்க்கை முறை-சமயம் ஆகியவற்றை மதித்து நடப்பதாகவும் ஆண்டுக்கொரு முறை மனசாட்சியை ஒதுக்கிவைத்துவிட்டு வெறுமனே பறைசாற்றிக் கொள்கிறோம். பன்முகத் தன்மையைக் கொண்டாடி, ஒரு மாத காலத்திற்கு ‘ஜாலோர் (ங்)கெமிலாங்கை’(தேசியக் கொடியை) பறக்க விடுகிறோம். நாட்டின் பல இன சமூகம் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக தொலைக்காட்சி-வானொலி உள்ளிட்ட தகவல் சாதனங்கள் கட்டமைத்து விளம்பரப்படுத்து-கின்றன. அஸ்ட்ரோ தொலைக்காட்சியும் தன்பங்கிற்கு ‘INILAH KITA’ (இதுதான் நம்முடைய பன்முகத்தன்மை) என்று விளம்பரம் செய்வதை நம்மில் எத்தனை பேர் நம்புகிறோம்? மனசாட்சியுடன் உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்!
தொடர்ந்து செப்டம்பர் 16-இல் மலேசிய தினமும் அணுசரிக்கப்பட்டபின், அடுத்த கணமே காட்சிகள் யாவும் மாறும்! ஒற்றுமையின்மையும் இன-சமய வெறுப்புணர்வும் அரசியல்வாதிகளாலும் மதவாத குழுவினராலும் தூண்டி விடப்படும்.
அண்மையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பாருங்கள்! முஸ்லிம் அல்லாத ஒரு வழிபாட்டுத்தலத்திற்கு சென்று அங்கு கடைப்பிடிக்கப்படும் சமய நடைமுறைகளைக் கண்டறிந்து உணரும்படி ஓர் இஸ்லாமியக் குழுவினர், அரசுசார் முஸ்லிம்நல அமைப்பினால் அனுப்பிவைக்கப் பட்டதற்கு, பிரபலமான ஒரு மதவாதி எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், இன்னொரு முப்தி இதற்கு ஆதரவு தெரிவித்தார். இஸ்லாத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில், வேற்று சமய வழிபாட்டுத் தலங்களுக்கு மேற்கொள்ளப்படும் இத்தகைய வருகை ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் என்று அந்த முப்தி மேலும் கருத்து தெரிவித்திருந்தார். திரங்கானு மாநிலத்தில் ஒரு சீன ஆலயத் திருவிழாவின்போது, பெண்கள் பாடுவதை அங்குள்ள அரசியல்வாதிகள் தடைசெய்தனர். தேசக் கட்டமைப்பிற்கும் மக்களின் ஒருமைப்பாட்டிற்கும் இத்தகைய நடவடிக்கை எல்லாம் எப்படி துணைநிற்கும்?

நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்பொழுது முஸ்லிம் சமயத்திற்கு மட்டும், வெ.2 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் வேளையில், முஸ்லிம் அல்லாத 10-க்கும் மேற்பட்ட சமயங்களுக்கு மொத்தமாக ஏறக்குறைய வெ.50 மில்லியன் நிதி ஏதோ கடமைக்காக அற்பமாக அறிவிக்கப்படும். ‘ருக்குன் நெகாரா’ என்னும் ஐங்கோட்பாட்டின் முதல் கோட்பாட்டிற்குரிய மாண்பு, இவ்வளவுதான்போலும்!.
பொருளாதாரத் திட்டங்களைப் பொறுத்தவரை, அடித்தட்டு நிலையிலுள்ள இந்திய சமுதாயத்திற்கென எந்த அறிவிப்பும் இல்லை. இத்தனைக்கும், ஐநா மன்றமே இந்தியர்களை மிகவும் ஏழைச் சமுதாயமென அறிவித்துள்ளது; அதுமட்டுமல்ல; இப்போதைய பிரதமரே இதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனாலும் பொருளாதாரம் தொடர்பான கொள்கை முடிவில் எந்த அறிவிப்பும் இல்லை.
1970-ஆம் ஆண்டுகளில் 4-ஆம், 5-ஆம் தலைமுறைகளைச் சேர்ந்த சுமார் 8லட்சம் இந்தியர்கள் தோட்டப்புறங்களில் இருந்து நகர-புறநகர்ப் பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தோட்டங்கள் துண்டாடப்பட்டதால் வேலை மறுக்கப்பட்டதுடன் வீடுகளுக்கான தண்ணீர்-மின்சார விநியோகத்தையும் தடைசெய்து நெருக்கடி ஏற்படுத்தியதால், அதுவரை வாழ்ந்த தோட்டங்களை விட்டு வெளியேறினர். அடுத்தடுத்தத் தோட்டங்களுக்கு சென்றவர்களும், கடைசியில் நகர்ப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஆசியாவில் மிகப்பெரிய இடப்பெயர்வுக்கு ஆளான சமூகம், மலேசிய இந்திய தோட்டப் பாட்டாளிகள் என்பதை உலகுக்குத் தெரிவிக்கும் அதேவேளை, இந்தச் சிக்கல் குறித்து இதுவரை எந்த மட்டத்திலும் ஆலோசிக்கப் படவில்லை. தவிர, கட்டாய இடப்பெயர்வுக்குத் தள்ளப்படும் சமூகத்தைக் கையாளும் வகை தொடர்பாக, ஐநா மன்றம் ஒருசில நடைமுறைகளை வகுத்துள்ளது. மொத்தத்தில், மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட இந்திய சமுதாயத்தின் நிலைமை, அன்றுமுதல் இன்றுவரை அப்படியேத் தொடர்கிறது. இடப்பெயர்வுக்கு ஆளான இந்தியத் தோட்டப் பாட்டாளிகள், நகரின் ஒதுக்குப்புறங்களில் எழுப்பிக்கொண்ட வசிப்பிடங்கள் சட்டத்துக்கு புறம்பானதாக அறிவிக்கப்பட்டன; புதிதாக உருவாக்கிய வழிபாட்டுத் தலங்களும் சட்ட-விரோதமாயின; அவர்களின் வழித்தோன்றல்களும் சட்டவிரோதவாசிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்தப் பட்டியல், இன்னும் நீளக்கூடியது. இந்த நீள்கதையைச் சுறுக்கமாகக் குறிப்பிட்டால், இந்தியர்களின் அனைத்து அம்சமும் சட்டவிரோதமானவை. கோலாலம்பூர், கம்போங் பாரு ‘செட்டில்மெண்ட்’ பகுதி மெர்டேக்காவிற்கு முன்பு அறிவிக்கப்பட்டது; அது, அரசு சொத்து என்பதால், அதை மீண்டும் கையகப்படுத்த அரசு விரும்புகிறது என ஒருவேளை அறிவிக்கப்பட்டால், என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இந்தியர்களைப் பாதிக்கும் நில விவகாரங்கள் ஒன்றும் புதிதல்ல; கெட்கோ நில(மாநில அரசு அனுமதித்த நில அபகரிப்பு) விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; அதைப்போல கம்போங் புவா பாலா(ஜசெக தொடக்கிவைத்த நில அபகரிப்பு); நெங்கிரி அணைத் திட்டத்திற்கு வெ.1.7 பில்லியன் அளவுக்கு கூடுதல் செலவு ஆகிறது என்றுகூறி, ஓர் அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அதைத் திரும்பப் பெற்றது, பின்னர் எந்தக் காரணமும் கூறப்படாமல் அல்லது நியாயப்படுத்தாமல் மீண்டும் தொடங்கியது; சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நாகரிகத் தன்மை கொண்ட காடுகளில் பெரும்பகுதியும் அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட விலங்குகளும் அழிக்கப்பட்டன. இந்த உண்மை குறித்தெல்லாம் நாட்டில் ஒரு தலைவர்கூட வாய்த் திறக்கவில்லை. காரணம், உயர்மட்டத்தைச் சேர்ந்த ஒருசிலரின் பில்லியன் கணக்கான வெள்ளி பரிமாற்றம் இதில் சம்பந்தப்பட்டிருந்தது. நில அபகரிப்பு-இயற்கை அழிப்பு குறித்து குரல் எழுப்பியவர்கள்மீது, இடதுசாரிகள் என்றும் தேசவிரோதிகள் எனவும் நவீன கட்டமைப்பிற்கு எதிரானவர்கள் என்றும் முத்திரைக் குத்தப்பட்டனர்.
மலேசிய அரசியல் சாசனத்தின் 153-ஆவது பிரிவை அனைத்து மலேசியர்-களும் மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை; அதே வேளை, மலாய் சமூக மறுமலர்ச்சிக்காக இதுவரை 1.5 டிரில்லியன் வெள்ளிக்கு மேல் ஒதுக்கிய பின்னும், மலாய் மக்கள் ஏன் இன்னமும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர் என்றும் அதற்கு உண்மையான காரணம் என்ன என்பதைப் பற்றியும் அதிகாரத்தில் இருப்பவர்களிடத்தில் கேள்வியெழுப்ப ஒருவருக்கும் துணிவில்லை. இதுவரை ஒதுக்கப்பட்ட பேரளவிலான நிதி யாவும் எங்கே சென்றன? புதிய பொருளாதாரக் கொள்கையுடன் அடுத்தடுத்து வகுக்கப் பட்ட கொள்கை யாவும் அதன் இலக்கை எட்டியதா என்பதைப் பற்றியோ அதிலுள்ள குறைபாடுகள் என்னென்ன என்பது குறித்தோ ஒருவரும் வினாத் தொடுக்கவில்லை. மலாய் சமூகம் முற்றுகைக்கு உட்பட்டிருப்பதாகவும் அவர்கள் விழிப்பாக இல்லையென்றால் அவர்களின் உரிமைகளை சீன வந்தேறிகள் பறித்துக் கொள்வார்கள் என்றும் அரசியல்வாதிகள் பயமுறுத்துகின்றனர். அத்துடன், சொந்த நாட்டிலேயே அவர்கள் பிச்சைக்காரர்களாக நேரிடும் என்றும் அச்சமூட்டுகின்றனர். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் எவ்வளவு காலத்திற்கு இப்படியே ஏமாற்றுவதுடன் மக்களையும் தவறாக வழிநடத்துவார்கள்? இத்தகைய பொய்யான கருத்துருவாக்கம் மலாய் சமூகத்தின் மனநிலையை தொடர்ந்து தவறான கண்ணோட்டத்திலேயே சிக்கவைத்திருக்கும். மலாய்ச் சமூகத்தை உயர்த்துவதற்காக அரசு வகுக்கும் பெருந்திட்டங்கள், முன்னெடுப்புகளால் பெரும்பயன் அடைவது மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே; ஏகபோக அரசியல்வாதிகளான இவர்கள், ஜிஎல்சி உள்ளிட்ட அரசுசார் நிறுவனங்களையும் தங்களின் பிடியில் வைத்துள்ளனர். இந்த நடைமுறை மலாய் மேல்தட்டுப் பிரிவினரிடையே சகோதரத்துவத்தை வளர்க்கிறது; தவிர, சீன-இந்திய பெருமுதலாளிகளின் உதவி-உறுதுணை-யுடன் இவர்கள் அரசியலிலும் நிலையான இடத்தை தக்கவைத்து வருகின்றனர். பெரும் லாபத்தை அள்ளி அளிக்கும் ஜிஎல்சி பதவிகள் அதிகார மட்டத்துடன் இணைந்து பயணிக்க இவர்களுக்கு உதவிபுரிகின்றன.
பூமிபுத்ராக்களை மேம்படுத்துவதற்காக என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகளால், உள்ளபடியே அந்த மக்கள் பயனடைந்து உள்ளார்களா? மாரா முதலீட்டில் நிகழ்ந்த ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். 2022-இல் மட்டும் ஆற்றலின்மை காரணமாக வெ.286 மில்லியன் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பொன்முட்டை இடும் வாத்தைப் போன்ற MAHB நிறுவனம் ஆண்டுக்கு 500 மில்லியன் வெள்ளிவரை இலாபந்தரக் கூடியது. அதை, யூத சார்புடைய ஒரு நிறுவனத்திற்கு விற்க முயற்சி நடைபெறுகிறது. பிரதமரும் அவரின் அமைச்சரவை உறுப்பினர்களில் சிலரும் இதை நியாயப்படுத்தி பேசுகின்றனர்; மறுபக்கம் பாலஸ்தீன விவகாரத்தில் பிரதமர், தன்னை மீட்பராக பிரகடப்படுத்திக் கொள்கிறார். MAHB-யை மேலும் விரிவாக்கி, அந்தப் பூமிபுத்ரா நிறுவனத்தின் தலைவர்கள் உச்சத்தைத் தொட அனுமதிப்பதை விடுத்து, சொந்த இலாபத்தை மட்டும் இலக்காகக் கொண்ட மேல்தட்டு வர்க்கத்தினர், MAHB மேற்கொள்ளும் முயற்சி-முன்னெடுப்புகளை முனைமுறிக்கும் விதமாக அதன் ஒப்பந்தங்களைக் குறைத்து, கடைசியில் அதை கைகழுவிவிடப் பார்க்கின்றனர்.
சுறுங்கச் சொல்ல வேண்டுமென்றால், நாட்டின் பல இன-பல சமய மக்களை இனத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் காலமெல்லாம் பிரித்தாளும் அரசியல்வாதிகள், தாங்களும் தங்களின் வாரிசுகளும் சுதந்திர மலேசியாவில் 100 ஆண்டுகளைக் கடந்தும் வளமாக வாழும் வகையை கட்டமைத்துக் கொண்டுள்ளனர். தேசக் கட்டமைப்பு, நாட்டின் சுபிட்சம், வளமான நாட்டை உருவாக்குதல் குறித்தெல்லாம் யார் கவலைப்படுகிறார்?. பொதுமக்கள் எப்போதும் ஏமாறக்கூடியவர்கள். அதனால், மலாய் மக்களை பயமுறுத்துவது; சீனர்கள் நாட்டின் வளத்தை சூரையாடுபவர்கள் என கதைக்கட்டுவது; இந்தியர்கள் குற்றப் பரம்பரையினர் எனக் காட்சிப்படுத்தி அவர்களை காலமெல்லாம் ஏழ்மையில் உழல வைப்பதுடன் தேசிய நீரோட்டத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் இடம்பெறாதபடி தள்ளிவைப்பது என்னும் போக்கு இன்றளவும் நீடிக்கிறது. பக்கத்தான் கூட்டணி மற்றும் மஇகா-வைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒருசில எலும்புத் துண்டுகளை வீசினால் போதும்; அவர்கள் தங்களின் சொந்த மக்களை கீழ் நிலையிலேயே வைத்திருப்பார்கள்.
அடித்தட்டு மலேசிய மக்கள், இன-சமய எல்லைகளைக் கடந்து, அரசியல் விழிப்புணர்வு பெற்று, தற்போதைய நிலையை துணிந்து எதிர்கொள்ள முன்வந்தால், மலேசியத் திருநாடு காப்பாற்றப்படுவதற்கான நல்வாய்ப்பு பிரகாசமாக உள்ளது; அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மலேசியாவின் 100-ஆவது மெர்டேக்கா தினத்தை நம்பிக்கையுடன் கொண்டாடுவதற்குரிய நல்லசூழல் உருவாகும். மலாய் அடித்தட்டு மக்கள், சீன அடித்தட்டு மக்கள், இந்திய அடித்தட்டு மக்கள் மற்றும் போர்னியோ அடித்தட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக எழுச்சிபெற வேண்டும். இந்தச் சக்தி, இன-மத அடையாளங்களைக் கடந்து, உண்மையான மலேசியர்கள் என்னும் உணர்வுடன் உருவாக வேண்டும்; அப்படிப்பட்ட நிலை உருவானால், நம் நாடு நிச்சயம் வெல்லும்.
மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபியும் ஹிண்ட்ராஃப் பேரியக்கமும் ஒன்றிணைந்து ‘நூற்றாண்டு மெர்டேக்கா’ என்னும் கருத்துருவாக்கத்தை அறிவிக்கவிருக்கின்றன. 2007-இல் ஹிண்ட்ராப் நடத்திய ஜனநாயகப் புரட்சியின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளான 2024 நவம்பர் 25-இல் அந்த அறிவிப்பைச் செய்ய இருக்கிறோம்.
