
-நக்கீரன்
கோலாலம்பூர், செப்.08:
நாட்டின் 16-ஆவது பொதுத் தேர்தலை நோக்கி தேசிய அரசியல் நகரும் இவ்வேளையில், மலாயாவில் உதித்த மூத்த அரசியல் இயக்கமான மஇகா-வின் தேசியப் பேராளர் மாநாடு அடுத்த வாரம், சிலாங்கூர் மாநிலத்தின் புதிய அரச நகரான ஷா ஆலமில் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த வாரம்-இன்று ஞாயிற்றுக்கிழமை, மஇகா இளைஞர்-மகளிர் பிரிவு மாநாடுகள் கோலாலம்பூர், சிறீ பசிஃபிக் தங்கும் விடுதில் முழு நாள் நிகழ்ச்சியாக எழுச்சியுடன் நடைப்பெற்றது.
இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி, காலையில் தனித்தனியாக நடைபெற்றபின், பிற்பகலில் இவ்விரு இளையர் அமைப்புகளுடன் புத்ரா-புத்ரி பிரிவினரும் இணைந்து நான்கு அமைப்புகளும் ஒருசேரக் குழுமின. மாநாட்டின் இந்த இரண்டாவது அங்கத்திற்கு, மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் தலைமை தாங்கினார்.

மலேசியத் தமிழிலக்கிய வட்டத்தில் சொல்வேந்தராகவும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தராகவும் வலம்வரும் இவருக்கு மிகப்பெரிய அளவில் எழுச்சி வரவேற்பு நல்கப்பட்டது.
கடந்த ஆண்டு(2023) இளைஞர்-மகளிர் பிரிவு மாநாடும் இதே அரங்கத்தில் நவம்பர் 05-ஆம் நாள், ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சோகம்சூழ, ஏதோ கடமைக்காக மேடைகண்டு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் முற்றும் முழுமுழுதுமாக நடந்து முடிந்தது.

காரணம், முதல் நாள் இரவில் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அன்பு சகோதரர் டத்தோ பாலன்குமரன், அகால மரணமடைந்திருந்தார்.
மாநாட்டைத் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்தும்படி தேசியத் தலைவர் கேட்டுக் கொண்டிருந்த நிலையிலும், துணைத்தலைவர் உள்ளிட்ட ஏனையத் தலைவர்கள் அடையாளத்திற்காக அறிமுகம் செய்துவிட்டு அடுத்த கணமே அனைவரும் தேசியத் தலைவரின் இல்லம் நோக்கி படையெடுத்தனர்.
இதன் விளைவோ அல்லது பிரதிபலிப்போத் தெரியவில்லை; இந்த ஆண்டு மிகவும் எழுச்சியுடன் இளைஞர்-மகளிர் மாநாடுகள் ஒருமுகமாக பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய சரவணன், தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் வாழ்த்தை முதற்கண் தெரிவித்தார். நாட்டில் நிறைய அரசியல் கட்சிகள் இருந்தாலும் நாளைக்கே எந்தவொரு மாணவருக்காவது கல்விக் கடனோ நிதிஉதவியோத் தேவைப்பட்டால் உடனே உதவும் ஆற்றல்பெற்றது 78 வருட மஇகா-தான் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் இந்திய சமுதாயம் சார்ந்து எண்ணற்றக் கட்சிகள் இருந்தாலும் அதுகுறித்து மஇகா பொருட்படுத்தவில்லை. அதேவேளை மஇகா எதிர்பார்ப்பதெல்லாம், மஇகா-வை மற்றக் கட்சிகள் வெறுமனே விமர்சிப்பதைக் காட்டிலும் மஇகா உருவாக்கிய எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தைப் போல இன்னொரு உயர்க்கல்வி நிறுவனத்தைக் கட்டமைக்க முனைப்புகாட்ட வேண்டும். அதைப்போல, நம் மாணவ சமுதாயத்தின் கல்வி மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு இயங்கும் மஇகா-வின் கல்விக் கரமான எம்.ஐ.இ. டி.-யைப் போல இன்னோர் அமைப்பை உருவாக்குவதன்மூலம் மஇகா-விற்கு சவால் விட்டால், அதனால் இந்திய சமுதாயம் மேலும் பயனடையும்.
பதவியில் இருக்கும்பொழுது கிடைக்கும் பெருமையாவும் தற்காலிகமானது; பதவியில் இல்லாத பொழுதும் ஒரு தலைவர் பேசப்படுகிறார்-நினைவுகூரப்டுகிறார் என்றால் அதுதான் நீடித்த- நிலைத்த பெருமை என்றும் அதற்கேற்ப தலைவர்கள் செயல்பட வேண்டும் என்றும் இது, தேசியத் தலைமை மற்றும் மாநில வட்டாரத் தலைவர்கள் அனைவருக்கும் பொதுவானது என்றார்.
மஇகா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ த.முருகையா, தேசியப் பொருளாளர் டான்ஸ்ரீ இராமசாமி, தேசிய நிருவாக செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரசாமி ராஜா, மாநிலத் தலைவர்களான டத்தோ சைமன் ராஜா(விலாயா), டத்தோ இளங்கோ(பேராக்) வி.எஸ். மோகன்(நெகிரி), தேசியத் தலைவரின் ஊடகச் செயலரும் மத்திய செயாலவை உறுப்பினருமான சிவசுப்பிரமணியன், தகவல் பிரிவுத் தலைவர் இரா.தினாளன் உட்பட ஏராளமான தலைவர்கள் இதில கலந்து கொண்டனர்.
முன்னதாக, புத்ரா பிரிவு தலைவர் டாக்டர் சதீஷ் குமார், புத்ரி பிரிவுத் தலைவி திருமதி தீபா சோலைமலை, மகளிர் தலைவி சரசுவதி நல்லதம்பி, இளைஞர் தலைவர் கி.அரவிந்த் ஆகியோர் பேசினர். நீண்ட காலம் சேவையாற்றும் மகளிருக்கு தேசியத் தலைமை அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று ந.சரசுவதி கோரிக்கை வைத்த வேளையில், 2024 கல்வி ஆண்டில் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்பு மிகவும் குறைவாகக் கிடைத்துள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.
மஇகா சபா மாநில மகளிர்த் தலைவி க.கமலேசுவரி, அவர்தம் தலைமையிலான குழுவினர் உட்பட, 1,200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் உள்ளீடான கருத்தாக, வரும் பொதுத் தேர்தலில் மஇகா-வின் வெற்றி குறித்ததாக இருந்தது. அச்சு-இணைய ஊடக்த்தினரும் அதிகமாக அணிதிரண்டிருந்தனர்.
