24.7 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

மைக்கி-யில் தலைமை மாற்றம் ஏற்படுமா?

73-ஆவது தேசியப் பேராளர் மாநாடு தீர்மானிக்கும்!

கோபால் – ஷான் இடையே கடும்போட்டி!

-நக்கீரன்

கோலாலம்பூர், செப்.27:
மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளத்தின்(மைக்கி) 73-ஆவது தேசியப் பேராளர் மாநாடு 28-09-2024 சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற உள்ள நிலையில், அதன் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ ந.கோபால கிருஷ்ணனை எதிர்த்து மைக்கியின் நடப்பு தேசியப் பொருளாளர் டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன் தலைவர் பதவிக்கு போட்டி இடுகிறார்.

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்தின் இந்த தேசியக் கூட்டமைப்பு, புதிய தலைவரைக் காணுமா அல்லது இன்றையத் தலைவரே நாளையும் தொடர்வாரா என்பது தேசியப் பேராளர்க் கூட்ட முடிவில் தெரியவரும்.

1950-இல் கட்டமைக்கப்பட்ட மைக்கி, இதுவரை 11 முறை தலைமை மாற்றம் கண்டுள்ளது. இதன் முதல் தலைவராக பொறுப்பேற்றவர் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபைதுல்லா. முஸ்லிம் வர்த்தக சங்கத்திலும் மஇகா தேசிய அரசியலிலும் முழு ஈடுபாடு கொண்டிருந்த உபைதுல்லா நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் மேலவைத் துணைத் தலைவராகவும் செயல் பட்டிருக்கிறார்.

உபைதுல்லாவிற்குப் பின் சி.எம்.சேத், குர்பகான் சிங் சம்பு, கே.பி.தாவூது சுல்தான், டான்ஸ்ரீ கிஷு திராத்ராய், டத்தோ வி.கே.கே.தியாகராஜன், டான்ஸ்ரீ கே.கென்னத் ஈஸ்வரன், டத்தோ பர்டிப் குமார் குக்ரெஜா ஆகியோரைத் தொடர்ந்து தற்பொழுது டத்தோஸ்ரீ ந.கோபாலகிருஷ்ணன் மைக்கியை வழிநடத்துகிறார்.

இவர்களில் உபைதுல்லா, ஈஸ்வரன் ஆகியோர் இரண்டுமுறை தலைவர்களாக செயல்பட்டுள்ளனர்.

டான்ஸ்ரீ ஈஸ்வரன் 2-ஆவது முறை தலைவராக இருந்தபொழுது, அது மைக்கி அமைப்பிற்கு பொற்காலமாக அமைந்தது. மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஈஸ்வரன் நிதி ஆதாரம் உள்ளிட்ட பல அணுகூலங்களை மைக்கி இயக்கத்திற்குப் பெற்று தந்தார்.

தீபகற்ப மலேசியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்திய வர்த்தக தொழிற்சங்கம்(Indian Chamber of Commerce and Industry) உள்ளது. போர்னியோ மாநிலங்களான சபா, சரவாக் உட்பட அனைத்து மாநில வர்த்தக-தொழிற்சங்கங்களும் இடம்பெற்றுள்ள மைக்கி, பத்து ஆண்டுகளுக்கு முன் பரபரப்பான அம்பாங் பகுதியில், யாப் குவான் செங் சாலையை ஒட்டி ‘மேகன் அவென்யூ II’ கட்டடத்தில் செயல்பட்டுவந்த நிலையில், புக்கிட் துங்கு அரசக் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டை குறுகிய கால குத்தகை அடிப்படையில் பெற்று, சீரமைப்பு செய்து அந்த இடத்தில்தான் தற்பொழுது மைக்கி இயங்குகிறது.

இதை, தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில், அரச மட்டத்தில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கச்சிதமாக செய்து முடித்தவர் கே.கே. ஈஸ்வரன்.

இருந்தபோதும், 2018 பொதுத் தேர்தலில் நஜீப் அதிகார நாற்காலியின் கால்களே உடைந்து போயின என்றால், அவர்தம் செல்வாக்கில் அடித்தாடிய ஈஸ்வரனின் உறைவாளும் பிடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் நடைபெற்ற மைக்கியின் தேசியப் பேராளர் மாநாட்டில் ஈஸ்வரனை வெற்றிகொண்டவர்தான் மைக்கியின் இன்றைய தலைவர் டத்தோஸ்ரீ ந.கோபாலகிருஷ்ணன்.

அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பின், 2021-இல் நடைபெற்ற தேசியப் பேராளர் மாநாட்டில், மீண்டும் தலைவரானார் கோபாலகிருஷ்ணன்; அந்தப் பேராளர் மாநாட்டின்போது, அடுத்தமுறை (2024 பேராளர் மாநாட்டில்) நான் தலைவர் பதவியை தற்காக்க மாட்டேன்; இந்தத் தவணையுடன் ஒதுங்கிக் கொள்வேன் என்று வாக்குறுதி அளித்தார் கோபால்.

ஆனாலும், சிலாங்கூர் இந்திய வர்த்தக-தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன், கோபாலகிருஷ்ணனை எதிர்த்து தலைவர் பதவிக்காகப் போட்டியிட்டார்; மைக்கிப் பேராளர்கள், கோபாலகிருஷ்ணனையே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

இந்த நிலையில், அடுத்த மூன்றாண்டுகள் கடந்து இப்பொழுது நடைபெற இருக்கும் 73-ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில், கடந்த முறை போட்டியிட்ட இதே இருவர் மீண்டும் மைக்கித் தலைவர் பதவிக்காக களமாடுகின்றனர்.

போட்டி மிகவும் கடுமையாக இருப்பதாகத் தெரிகிறது. நேரடியாக அணி பிரிந்து களம் காணாவிட்டாலும் கோபாலகிருஷ்ணன், சண்முகநாதன் இருவரும் காதும் காதும் வைத்தாற்போல கமுக்கமான முறையில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஒரு தரப்பினர், மீண்டும் கோபாலகிருஷ்ணனே மைக்கி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மற்றொரு தரப்பினர், கடந்த முறை வாக்களித்தபடி கோபால கிருஷ்ணன் ஒதுங்கிக் கொண்டு புதிய தலைமைக்கு வழிவிட வேண்டும் என்றும் மைக்கி தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என்றும் கூறி, சண்முகநாதனுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மாநிலங்களில் உள்ள இந்திய வர்த்தக-தொழிற்சங்க தலைவர்களிடம் கேட்டால், திடமான கருத்து எதனையும் தெரிவிக்காமல் பாலுக்கும் காவல்-பூனைக்கும் தோழன் என்பதைப் போல தம் நிலையை இப்படியும் அப்படியுமாக வெளிப்படுத்துகின்றனர். இன்னும் சிலரோ, கருத்து தெரிவிக்காமல் ஒதுங்கிக் கொள்கின்றனர். மொத்தத்தில் நிலைமை 50-50 என்ற நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. யார் வென்றாலும் சொற்ப வாக்குகள் பெரும்பான்மையில்தான் வெல்லக்கூடும். இது டத்தோ வி.சண்முகநாதனுக்கும் பொருந்தும்; கோபாலகிருஷ்ணனுக்கும் பொருந்தும்.

இதற்கிடையில், மைக்கியில் உறுப்பியம் பெற்றுள்ள தொழிற் சங்கங்களின் (Trade Associations) தலைவர்களின் நிலைகுறித்து கேட்டால், அவர்கள் தெரிவிக்கும் கருத்து பாரதூரமாக இருக்கிறது.

மாநில வர்த்தக-தொழிற்சங்கங்களைத் தவிர, மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்(PRIMAS), மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம்(PRESMA), சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கம், ஜவுளிக்கடை உரிமையாளர் சங்கம், மினி மார்க்கெட் உரிமையாளர் சங்கம், மளிகைக் கடை உரிமையாளர் சங்கம், உலோக மறுசுழற்சி வர்த்தக சங்கம் என்றெல்லாம் ஏறக்குறைய 20 வணிக சங்கங்களும் மைக்கியில் உறுப்பியம் பெற்றுள்ளன.

இப்படிப்பட்ட வர்த்தக சங்கங்களின் உறுப்பினர்கள் 200 பேர்வரை இருந்தால் அவை ஆண்டுக் கட்டணமாக 1,500 வெள்ளியும் 200 பேருக்கு மேல் இருந்தால் 3,000 வெள்ளியும் செலுத்த வேண்டும்.

வர்த்தக சங்கங்கள் எதிர்கொள்ளும் தொழிலாளர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை; மைக்கி தலைமை என்னதான் முயன்றாலும் வாக்குறுதி அளிக்கப்படுகிறதேத் தவிர, மத்தியக் கூட்டரசின் உயர்மட்ட அதிகாரிகள் கொஞ்சமும் மசிவதில்லை.

கட்டடத்தை வாடகை எடுத்து,
சங்கப் பதிவகத்தில் பதிந்து SSM சான்றிதழ் பெற்று நாங்கள் தொழிலை நடத்தும்பொழுது, ‘டிக்-டோக்’ போன்ற சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து அலுங்காமல் குலுங்காமல் வணிகம் செய்வோர் சுலபமாக இலாபம் பார்க்கின்றனர்.

போதாக்குறைக்கு பண்டிகைக் காலங்களில் வர்த்தக கண்காட்சி மூலமும் வீதியோரக் கடைகள் மூலமும் எளிதாக வியாபாரம் செய்வதை மைக்கியாலும் தடுக்க முடியவில்லை; மத்திய-மாநில அரசுகளும் பாராமுகமாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, மைக்கி நிருவாக பொறுப்புகளில் மாநில வர்த்தக-தொழிற்சங்கங்கள்தான் இடம்பெற முடியுமேத் தவிர, எங்களைப் போன்ற தொழிற்சங்கங்கள்(Trade Associations) இடம்பெற முடியாது.

இப்படியாக, தொழிலாளர் பற்றாக்குறை ஒருபெரும் சிக்கல் என்றால், வணிக நடைமுறையிலும் பலவகை பாதிப்புகள் ஏற்படுகின்றன; இதனால், அலுப்பும் சலிப்பும் அடைந்த பெரும்பாலான வர்த்தக சங்கங்கள் மைக்கி-க்கு செலுத்த வேண்டிய ஆண்டுக் கட்டணத்தை செலுத்தவில்லை.

ஏதோ ஒன்றிரண்டு சங்கங்கள் மட்டும் நல்லெண்ண அடிப்படையில் ஆண்டு சந்தாவைச் செலுத்தியுள்ளதால், அவை மட்டும் 28-09-2024 மைக்கி தலைவர். துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்களிக்கலாம்; மற்ற தொழிற்சங்கங்களுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது; ஆனால், வாக்களிக்கும் உரிமை இல்லை.

கென்னத் ஈஸ்வரன் காலத்தில் இப்படி யெல்லாம் வர்த்தக சங்கங்கள் மைக்கி தலைமைக்கு ‘தண்ணீர்க் காட்ட’ முடியாது.

இந்த வகையில் பார்த்தால், டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தலைமை பலவீனமாக இருப்பதாகத் தெரிகிறது. ஒருசில வர்த்தக சங்கத் தலைவர்கள் மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டால், அவரிடம் எளிதில் பேசமுடிவதில்லை என்ற குறைபாட்டை வெளிப்படுத்துகின்றனர்..

மலாய் வர்த்தக-தொழிற்சங்க சம்மேளனம், சீன வர்த்தக-தொழிற்சங்க சம்மேளனம், இந்திய வர்த்தக-தொழிற்சங்க சம்மேளனம் போன்றவை இணைந்த தேசிய வர்த்தக-தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக பெரும்பாலும் மலாய்க்காரர்களும் அவ்வப்பொழுது சீனர்களும் பொறுப்பு வகிப்பது வழக்கம்; இந்த நிலையில், கென்னத் ஈஸ்வரன் தலைவராக இருந்தபொழுது முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேசிய வர்த்தக-தொழிற்சங்க சம்மேளனம், அதன் தலைவராக மலாயர், சீனர், இந்தியர் என சுழற்சி முறையில் பொறுப்பு வகிக்க சம்மதம் தெரிவித்தது.

டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன்

இத்தகைய சுழற்சி முறையால், தற்பொழுது மைக்கியின் தலைவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. வாராது வந்த மாமணியைப் போல மைக்கித் தலைவராக இருக்கும் அதேவேளை, மலேசிய தேசிய வர்த்தக-தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகவும் இருக்கும் மகுட வாய்ப்பை இழக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன் கடந்த முறை கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, இப்பொழுது மீண்டும் மூன்றாவது தவணையாகப் போட்டி இடுவதை ஒருசாரார் ரசிக்கவில்லை.

அந்தப் பதவி, தனிப்பட்ட கோபாலகிருஷ்ணனுக்கு அளிக்கப்படவில்லை; மாறாக மைக்கி தலைமைக்கு வழங்கப்பட்ட பதவி என்பதால், டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஒருவேளை தோல்வி அடைந்தால், அடுத்தத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன் இயல்பாகவே மலேசிய தேசிய வர்த்தக-தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் தகுதியைப் பெறுவார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மைக்கி என்ற ஒரு அமைப்பு இருப்பது குறித்து, முன்புபோல ஊடகத்தில் பரபரப்பான செய்தி வருவதில்லை; கென்னத் ஈஸ்வரன் காலத்தில் குன்றின் மேல் விளக்கைப் போன்றிருந்த மைக்கி, தற்பொழுது குடத்திற்குள் வைத்த விளக்கைப் போல இருக்கும் இடம் தெரியவில்லை என்ற விமர்சனமும் ஒருசாராரால் வைக்கப்படுகிறது.

கோபாலகிருஷ்ணன் தலைமைத்துவத்தில் புதிதாக நிதி சேரவில்லை என்றும் முன்பிருந்த தலைமை சேகரித்துவைத்த நிதியைக் கொண்டுதான் செலவு செய்கின்றனர் என்ற குறைபாடும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தத்தில் மைக்கி தலைமையில் மாற்றம் வேண்டும் என்று ஒரு சாரார் உறுதியாக இருக்கின்ற வேளையில், இருக்கின்ற தலைமையேத் தொடரட்டும் என்று இன்னொரு சாராரும் விரும்புவதால் நிலைமை கடுமையாக இருப்பதாகவேத் தெரிகிறது.

எது எவ்வாறாக இருந்தாலும், மைக்கியின் தகுதிபெற்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் போக்கு, அடுத்தத் தலைவர் யார் என்பதை உறுதிப்படுத்தும்.

இதற்கிடையில், மைக்கி துணைத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரசாமி ராஜா, மலாக்கா மாநிலத்தின் ராஜசேகர், நடப்பு துணைத்தலைவர் ஷாம் சுந்தர் ரத்னானி ஆகியோர் போட்டி இடுகின்றனர். முடிவு, பேராளர்களின் வாக்களிப்பில்.. .!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles