
கோலாலம்பூரின் பரபரப்பான சுற்றுலா மற்றும் வணிக பகுதிகளான ஜாலான் சுல்தான், ஜாலான் புடு மற்றும் புக்கிட் பிந்தாங் பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி அமலாக்க நடவடிக்கையில், 211 போக்குவரத்து சம்மன்கள் வழங்கப்பட்டதுடன், 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சிறப்பு போக்குவரத்து நடவடிக்கையை கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL), போலிஸார் மற்றும் சாலைப் போக்குவரத்து துறை (JPJ) இணைந்து வெள்ளிக்கிழமை மேற்கொண்டன.
DBKL தனது சமூக ஊடகப் பதிவில் வெளியிட்ட புகைப்படங்களில், குறுகிய சாலைகளில் விதிமீறி நிறுத்தப்பட்ட வாகனங்கள் போக்குவரத்துக்கு கடும் இடையூறு விளைவித்ததையும், மீட்பு வாகனங்கள் மூலம் வாகனங்கள் அகற்றப்பட்டதையும் காண முடிந்தது.
சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டதாக நம்பப்படும் சுற்றுலா பேருந்துகளுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, பொதுச் சாலைகளிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்திய குற்றச்சாட்டில் DBKL 55 அபராத நோட்டீஸ்களை வழங்கியதுடன், 10 வாகனங்களை பறிமுதல் செய்தது.
இந்நடவடிக்கை 1959ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை, போலிஸார் 21 சம்மன்களையும், JPJ அதிகாரிகள் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள், சிக்னல் மீறல் மற்றும் தடங்கல் குற்றங்களுக்காக 135 நோட்டீஸ்களையும் வழங்கினர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தற்காலிக சேமிப்பு மற்றும் ஆவணப்படுத்தலுக்காக DBKL வாகன களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
“இணைந்த அமலாக்க நடவடிக்கைகள் நகரின் பிற போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும் தொடரும்,” என்று DBKL தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து சாலைப் பயனர்களும் போக்குவரத்து விதிகளையும் சிக்னல்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கடுமையான அமலாக்க நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். “பெட்டாலிங் ஸ்ட்ரீட் மற்றும் புடு பகுதியில் சிறந்த வேலை. தொடர்ந்து செய்யுங்கள்,” என்று ஜேசன் ஸ்மித் சியா என்ற பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.



