
நம்பிக்கை கூட்டணி தொடர்ந்து பிளவுபட்ட நிலையில் செயல்பட்டால், முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்தத் தயங்க மாட்டேன் என்று பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டணித் தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
“அண்மையில் இந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல், நம்பிக்கை கூட்டணி தலைமையுடனும் நான் கலந்துரையாடவுள்ளேன். நமது உறவுகள் தொடர்ந்து பிளவுபட்டபடியே இருந்தால், நாடு தழுவிய பொதுத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பொதுத் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதமருக்கு இருந்தாலும், அந்த முடிவு கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களுடனும் இணைந்து எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும். நமது கூட்டணி நண்பர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும்,” என்றார்.
ஜொகூர் பாருவில் நடைபெற்ற நம்பிக்கை கூட்டணி மாநாட்டில் உரையாற்றியபோது அன்வார் இவ்வாறு தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



