
மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP), வரும் பொதுத் தேர்தலில் 12 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 20 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைவர் புனிதன் தெரிவித்துள்ளார்.
ஈப்போவில் நடைபெற்ற “உறவுகள்” மேடை நாடக நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் அரசியல் மற்றும் சமூக ரீதியான பணிகளை கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருவதாக கூறினார்.
“மலேசிய இந்திய மக்கள் கட்சி ஒரு அரசியல் கட்சியாக நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தேர்தலை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றார்.
நாடு தழுவிய ரீதியில் பல தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து வருவதாகவும், மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஒவ்வொரு வாரமும் பல மாநிலங்களில் சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம். சமூகத்துடன் இணைந்தே செயல்படுவது எங்களுடைய முக்கிய பொறுப்பு,” என்று புனிதன் கூறினார்.
அரசியலைத் தாண்டியும் சமூகத்திற்கு வழிகாட்டும் கட்சியாக MIPP செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த சனி, ஞாயிறு மட்டும் பார்த்தாலும் பேரா மாநிலத்தில் ஐந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம். மக்களோடு மக்களாக இணைந்து செயல்படுகிறோம்,” என்றார்.
இவை சமூக நிகழ்ச்சிகளாக இருந்தாலும், தேர்தலை முன்னிட்டு அரசியல் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தொகுதி ஒதுக்கீடுகளை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அண்மையில் நடைபெற்ற தேசிய உச்சமன்றக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
“இதுவரை 12 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 20 சட்டமன்றத் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ள தொகுதிகளையே முன்னுரிமையாக பார்க்கிறோம்,” என்றார்.
இந்தியர்களின் குரல் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் வலுவாக ஒலிக்க வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய நோக்கம் என புனிதன் வலியுறுத்தினார்.



