
மலேசியாவில் தனது பதவிக்காலத்தை விரைவில் நிறைவு செய்யவுள்ள இந்திய தூதர் பி.என். ரெட்டி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரியாவிடை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு மலேசியா மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தற்போது விரிவான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பு நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் வர்த்தகம், இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு, உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் மக்கள்-மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் உறுதியை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டுள்ளதாக அன்வார் தனது X சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டில் மலேசியா – இந்தியா இருதரப்பு வர்த்தகம் 18.59 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம், தெற்காசியாவில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா தொடர்ந்து திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.



