
மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை (மே 17) இஸ்தானா நெகாராவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்க அனுமதி வழங்கினார்.
இந்தச் சந்திப்பில் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கரும் கலந்துகொண்டதாக மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்திற்குள் பிளவுகள் தொடர்ந்து அதிகரித்தால், திடீர் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று பிரதமர் அன்வார் எச்சரித்த ஒரு நாள் கழித்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முன்னதாக, கூட்டணிக்குள் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மதிக்கப்படாவிட்டால், தேர்தல் ஜோகூரைத் தாண்டி நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பஹாங் மற்றும் பினாங்கு போன்ற மாநிலங்களுக்கும் விரிவடையக்கூடும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
இதுகுறித்து பாகத்தான் ஹராப்பான் தலைமையுடன் கலந்தாலோசனை நடத்தவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்திருந்தார்.
மேலும், திறமையான மற்றும் நிலையான ஆட்சிக்காக அரசியல் ஸ்திரத்தன்மை மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த சனிக்கிழமை (மே 16) ஜோகூர் பாருவில் நடைபெற்ற பாகத்தான் ஹராப்பான் மாநாட்டில் உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.



