
பாரிசான் நேசனல் (BN), சபா மக்கள் கூட்டணி (GRS) மற்றும் சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) ஆகியவை தற்போதைய பதவிக்காலம் நிறைவடையும் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதாக மீண்டும் உறுதியளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
மடானி அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு பிரதமர் தனது நன்றியையும் தெரிவித்ததாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்ஸில் கூறினார்.
“ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதுகாக்கவும், தற்போதைய ஆட்சிக் காலம் முடியும் வரை அரசாங்கத்துடன் உறுதியாக நிற்கவும் கூட்டணிக் கட்சிகள் மீண்டும் உறுதி தெரிவித்துள்ளன,” என்று அவர் வாராந்திர ஊடகச் சந்திப்பில் கூறினார்.
“இது வெறும் அரசியல் ஆதரவு மட்டுமல்ல. மக்களின் நலனையும் நாட்டின் எதிர்காலத்தையும் முன்னிலைப்படுத்தும் முக்கிய அரசியல் செய்தியாகும்,” என்றும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலையும், உலகளாவிய பொருளாதார சவால்களும் அதிகரித்து வரும் நிலையில், இந்த அரசியல் ஒற்றுமை அரசாங்கத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, அண்மையில் அரசியல் வட்டாரங்களில் பரவியிருந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த அமைச்சரின் ராஜினாமா குறித்தும் எந்த விவாதமும் இடம்பெறவில்லை என்றும் ஃபஹ்மி தெளிவுபடுத்தினார்.



