
இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள Global Sumud Flotilla (GSF) 2.0 மனிதாபிமானப் பயணக் குழுவின் பங்கேற்பாளர்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்று சுமுட் நுசந்தரா கட்டுப்பாட்டு மையம் (SNCC) தெரிவித்துள்ளது.
எஸ்.என்.சி.சி இயக்குநர் ஜெனரல் டத்தோ சனி அரபி அப்துல் அலிம் கூறுகையில், மனிதாபிமான ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 48 மணி நேரம் கடந்தும், அவர்களின் நிலைமை குறித்து எந்த புதுப்பிப்பும் வெளியிடப்படாதது கவலைக்குரியது என்றார்.
“அவர்களின் தற்போதைய நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை பெறவில்லை. அவர்கள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கலாம் என்ற அச்சமும் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
“அஷ்டோத் துறைமுகத்தை அடைந்த 48 மணி நேரத்திற்குள் கூட எந்த உறுதிப்படுத்தலும் இல்லை என்றால், இது மிகவும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற GSF 2.0 பணி தொடர்பான ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, துருக்கியின் மார்மாரிஸ் துறைமுகத்திலிருந்து 54 கப்பல்கள் காசாவை நோக்கிப் புறப்பட்டதாகவும், அந்த மனிதாபிமானப் பயணம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும், சமீபத்திய பாதுகாப்பு அபாய மதிப்பீட்டின் அடிப்படையில் மஞ்சள் மற்றும் சிவப்பு பாதுகாப்பு மண்டல எல்லைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.என்.சி.சி தெரிவித்துள்ளது.
“கடந்த ஆண்டு நடைமுறையில் இருந்ததுபோல, முக்கிய தருணங்களில் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்க, பங்கேற்பாளர்கள் தங்களது கைப்பேசிகளை அப்புறப்படுத்துமாறு முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்,” என்றார்.
அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதும், மலேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுடனான அனைத்து தொடர்புகளும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.



