
பினாங்கில் மாநிலத் தேர்தலை பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடத்துவது நடைமுறையில் சிரமமானதாக இருக்கும் என்று பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோ தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கியுள்ள ஆட்சிக் காலம் இன்னும் நிறைவடையாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநிலத் தேர்தலை ஒருங்கிணைப்பது நியாயமற்றதாக இருக்கும் என்று அவர் கூறினார். குறிப்பாக, பினாங்கு மாநில அரசின் தற்போதைய பதவிக்காலம் முடிவடைய இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒரு மாநில அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கியுள்ள ஐந்து ஆண்டுகால ஆணையை முழுமையாக மதிக்க வேண்டும். இன்னும் நீண்ட காலம் ஆட்சி செய்ய வேண்டிய நிலையில், நாடாளுமன்றத்துடன் சேர்த்து மாநில சட்டமன்றத்தையும் கலைப்பது பொருத்தமானதாக இருக்காது,” என்று அவர் தெரிவித்தார்.
பட்டர்வொர்த், செபராங் ஜெயாவில் அமைந்துள்ள சன்வே மருத்துவ மையத்தின் புதிய எலும்பியல் மையத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாவ் கோன் இயோ, மாநிலத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும் விளக்கமளித்தார்.



