
வெறும் 1,000 ரிங்கிட் இணையக் கடன் பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர், பின்னர் 16,800 ரிங்கிட் செலுத்துமாறு மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக செயல்படும் சட்டவிரோத கடன் வழங்குநர்களின் மோசடி நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பும் வகையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய யாப் என்ற மாணவர், இன்ஸ்டாகிராம் மூலம் 1,000 ரிங்கிட் கடனுக்கு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், பல்வேறு “சேவை கட்டணங்கள்” மற்றும் “நிர்வாகக் கழிவுகள்” என்ற பெயரில் தொகைகள் பிடித்தம் செய்யப்பட்டதால், அவரது கைக்கு கிடைத்தது வெறும் 700 ரிங்கிட் மட்டுமே. அதுவும் ஒரே தடவையில் வழங்கப்படாமல், தவணை முறையில் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்குள் முழுக் கடனையும் திருப்பிச் செலுத்திய போதிலும், கடன் வழங்கிய தரப்பு கூடுதலாக 8,000 ரிங்கிட் “தீர்வுக் கட்டணம்” செலுத்துமாறு கோரியதாக மாணவர் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு மிரட்டல்கள் தொடங்கியதாக கூறப்படுகிறது. “வணிக இழப்பீடு” என்ற பெயரில் 16,800 ரிங்கிட் கோரப்பட்டதுடன், இரத்தக் கறைகள் படிந்தது போன்ற போலி புகைப்படங்கள், “Scammer Alert” என்ற வாசகங்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தும் செய்திகள் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டின் மீது வண்ணம் தெளிப்பது, தீ வைப்பது போன்ற அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் மேலும் தீவிரமடைந்த நிலையில், வீட்டின் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க 3,000 ரிங்கிட் கப்பம் கோரி ஒரு நபர் மிரட்டியதாகவும், பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 12,000 ரிங்கிட் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் மாணவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.



