
தேசிய முன்னணி (BN) வழங்கிய ஆதரவு இல்லையெனில் இன்று மத்திய அரசில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்திருக்காது என்று துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார். தேசிய முன்னணியின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜொகூரில் நடைபெற்ற தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திர தொடக்க விழாவில் உரையாற்றிய ஜாஹித், தேசிய முன்னணியைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் தற்போதைய அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும் என்று கூறினார். “தேசிய முன்னணியின் 30 இடங்கள் இல்லாமல், நம்பிக்கை கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்திருக்காது. இந்த உண்மையை யாரும் மறுக்க முயற்சிக்க வேண்டாம்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதற்காக தேசிய முன்னணி மேற்கொண்ட தியாகங்களும், அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த ஆற்றிய பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். “நாங்கள் செய்த தியாகங்களையும், ஆற்றிய பங்கையும் யாரும் சிறுமைப்படுத்தக் கூடாது. நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்காக நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் எதிரிகளுக்கு சவால் விடுத்த ஜாஹித், 56 தொகுதிகளிலும் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார். “போட்டியிடுங்கள், களத்தில் சந்திப்போம்,” என்று அவர் கூறியதோடு, தேசிய முன்னணி தேர்தலை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.



