
பாஸ் கட்சி, பெர்சத்து கட்சியுடனான தனது அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தலைமையில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோலாலம்பூரில் உள்ள பாஸ் தலைமையகத்தில் இன்று இரவு நடைபெற்ற கூட்டத்தில், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் எதிர்கால அரசியல் திசைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக பாஸ் மற்றும் பெர்சத்து இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் நம்பிக்கையின்மை இந்த முடிவுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பெர்சத்து கட்சி இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக பாஸ் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இறுதியாக பாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மே 22ஆம் தேதி ஹாடி அவாங், பெர்சத்துவுடனான உறவுகளை தனது கட்சி மறுமதிப்பீடு செய்து வருவதாகவும், டான்ஸ்ரீ முகிடின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியுடன் கூட்டணி இல்லாமல்கூட அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாஸ் எடுத்துள்ளதாகக் கூறப்படும் புதிய முடிவு தேசிய அரசியல் களத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்



