
அரசியலில் கடுமையான மற்றும் மோசமான வார்த்தைகள் அதிகரிப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று நம்பிக்கை கூட்டணியின் தகவல் தொடர்பு இயக்குநரும் அரசாங்க செய்தித் தொடர்பாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் எச்சரித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கிடையிலான உறவுகளை பாதிக்கக்கூடிய வகையிலான அறிக்கைகளை வெளியிடும் போது அரசியல் தலைவர்கள் மிகவும் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சிக்கும் சூழலில், பொது அறிக்கைகள் ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றார்.
ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி, ஜசெக கட்சியுடன் தேர்தல் ஒத்துழைப்பை நிராகரித்ததாக வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தபோது ஃபஹ்மி இவ்வாறு கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்கொலை சம்பவங்கள் தொடர்பான பாதுகாப்பான ஊடக அறிக்கையிடல் குறித்த வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மோசமான வார்த்தைகள் அதிகரிக்க அதிகரிக்க, நிலைமை இன்னும் மோசமாகிறது. எனவே அரசியல் தலைவர்கள் தங்களது பேச்சிலும் அறிக்கைகளிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் நலன் மற்றும் அரசியல் ஒற்றுமை முதன்மையாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


