
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றத்திற்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தை, சுமார் 18 மணி நேர தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு திங்கட்கிழமை அதிகாலை நிறைவடைந்தது.
இந்தச் சந்திப்பின் முக்கிய விளைவாக, பெய்ரூட்டில் நிலவும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ‘முரண்பாடு தடுப்பு ஒருங்கிணைப்பு அமைப்பு’ (Deconfliction Unit) ஒன்றை உருவாக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையின்படி, லெபனான் அரசாங்கத்தின் பங்களிப்புடன் செயல்படும் இந்த அமைப்பு, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் முயற்சிகளைக் கண்காணிக்கும் முக்கிய பொறுப்பை ஏற்கும்.
எனினும், ஹிஸ்புல்லாவை இலக்காகக் கொண்டு தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர இந்த முயற்சி போதுமானதா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும், அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முன்னேற்றம் காணப்படுவதாக இடைத்தரகர் நாடுகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.



