
முன்னாள் தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள இந்து ஆலயங்களுக்கு மாற்று நிலம் வழங்கும் பொறுப்பை மேம்பாட்டு நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் வலியுறுத்தியுள்ளார். பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும் முன்னாள் தோட்ட ஆலயங்கள் இன்னும் தெளிவான நில அந்தஸ்து இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்ற விவாதத்தின் போது இந்த விவகாரத்தை எழுப்பியதாகக் கூறிய அவர், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல இந்து ஆலயங்கள் தோட்ட உரிமையாளர்களின் அனுமதி மற்றும் ஆதரவுடன் நிறுவப்பட்டதாக விளக்கினார். இந்த ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் முக்கிய மையங்களாகவும் விளங்கி வருகின்றன என்றார்.
ஆனால் காலப்போக்கில் தோட்ட நிலங்கள் வீடமைப்பு, வணிக மற்றும் நகர மேம்பாட்டு திட்டங்களுக்காக புதிய உரிமையாளர்களிடம் மாற்றப்பட்டபோது, பல ஆலயங்களுக்கு பொருத்தமான தீர்வுகள் வழங்கப்படவில்லை. சில ஆலயங்கள் சட்டபூர்வமான நில அந்தஸ்து இன்றி அசல் இடங்களிலேயே தொடர்ந்து இயங்கி வருகின்றன. மேலும் சில ஆலயங்கள் மாற்று இடம் வழங்கப்படாமல் அகற்றப்படும் அபாயத்தையும் எதிர்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக பல பாரம்பரிய ஆலயங்கள் இன்று ‘சட்டவிரோத ஆலயங்கள்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, முன்னாள் தோட்ட நிலங்களை மேம்படுத்தும் ஒவ்வொரு நிறுவனமும் அங்கு உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு பொருத்தமான மாற்று நிலத்தை ஒதுக்கி, அதனை கெசட் செய்ய வேண்டும் என்று டாக்டர் குணராஜ் வலியுறுத்தினார். மாற்று நிலம் வழங்குவது மட்டும் போதாது; அதன் உரிமை மற்றும் சட்ட அந்தஸ்தும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். வளர்ச்சி என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக தோட்டத் தொழிலாளர் சமூகத்தால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் வரலாறும் பங்களிப்பும் புறக்கணிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.



