
மலேசியாவின் முன்னணி அரசியல் தலைவர்களின் செயல்பாடு குறித்து மெர்டேகா சென்டர் (Merdeka Center) நடத்திய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 52 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த மார்ச் 12 முதல் ஏப்ரல் 9 வரை நாடு முழுவதும் 1,209 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மதிப்பீடு செய்யப்பட்ட ஏழு முக்கிய அரசியல் தலைவர்களில் அன்வார் அதிகபட்ச திருப்தி மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுடின் 50 விழுக்காடு ஆதரவுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆய்வின்படி, முன்னாள் பிரதமரும் பெர்சத்து தலைவருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் 36 விழுக்காடு ஆதரவைப் பெற்றுள்ளதுடன், முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி 32 விழுக்காடு ஆதரவைப் பெற்றுள்ளார். பாஸ் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் 25 விழுக்காடு ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி 24 விழுக்காடு ஆதரவுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார். மேலும், 61 விழுக்காடு மக்கள் சாஹிட்டின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், உலகளாவிய பொருளாதார சவால்கள் தொடர்ந்தாலும், மலேசியா சரியான பாதையில் பயணித்து வருவதாக 47 விழுக்காடு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேவேளையில், 73 விழுக்காடு மக்கள் தங்களின் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதாரச் சுமைகளே நாட்டின் மிக முக்கிய சவாலாக இன்னும் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளதாக மெர்டேகா சென்டர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.



