
படிவம் 6 (STPM) மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு, 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் போது வெளியிடப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தற்போதைய சூழலில் இதுகுறித்து மேலும் விரிவாக கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.
முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், படிவம் 6 மாணவர்களுக்கான உதவித்தொகை தொடர்பான முன்மொழிவை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
“ஜொகூரில் இதை விட அதிகமாக என்னால் கூற முடியாது. அது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக இருக்கும். இருப்பினும், இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
STPM மாணவர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “2027 பட்ஜெட்டை காத்திருங்கள். ஒரு நல்ல செய்தியை அறிவிப்பேன்,” என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.



