
SUKMA 2026 கபடி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிலாங்கூர் அணிகளுக்கு, சிலாங்கூர் கபடியின் ‘வளர்ப்புத் தந்தை’ (Bapa Angkat Kabadi) என்ற முறையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற மகளிர் கபடி இறுதிப் போட்டியில், சிலாங்கூர் அணி கூட்டரசுப் பிரதேச அணியை 34–33 என்ற மிக நெருக்கமான புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.
அதேவேளை, ஆடவர் பிரிவில் சிலாங்கூர் அணி கெடாவுக்கு எதிராக கடுமையான போட்டியை வழங்கியது. இறுதியில் 28–29 என்ற ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
“சிலாங்கூர் கபடியின் வளர்ப்புத் தந்தையாக, SUKMA 2026 போட்டியில் நமது வீரர், வீராங்கனைகள் வெளிப்படுத்திய போராட்ட குணத்தையும் சுறுசுறுப்பான ஆட்டத்தையும் காண்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன்,” என்று டாக்டர் குணராஜ் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்த வெற்றிக்குப் பின்னால் கடுமையாக உழைத்த பயிற்சியாளர், அணி மேலாளர் மற்றும் சிலாங்கூர் கபடி சங்கத்தின் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
அவர்களின் அர்ப்பணிப்பு, சிறந்த வியூகம் மற்றும் இடைவிடாத முயற்சியே சிலாங்கூர் அணியின் இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த வெற்றி சிலாங்கூர் கபடி தொடர்ந்து முன்னணியில் இருப்பதையும், மாநிலத்தில் திறமையான கபடி வீரர், வீராங்கனைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது. தொடர்ந்து போராடுங்கள்; மேலும் பல வெற்றிகளைப் படையுங்கள்,” என்று டாக்டர் குணராஜ் வாழ்த்தினார்.



