
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவ முன்வந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மனிதநேய நடவடிக்கையை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பாராட்டியுள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் அமெரிக்க டாலர் (US$1 மில்லியன்) நிதியுதவி வழங்கப்பட்டதுடன், மலேசியாவின் SMART பேரிடர் மீட்புக் குழுவும் உதவிப் பணிகளுக்காக களமிறக்கப்பட்டுள்ளதை அவர் வரவேற்றார்.
இந்த நடவடிக்கை, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் மலேசியா கொண்டுள்ள மனிதநேய உணர்வையும் சர்வதேச ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
“நேபாள வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்ந்து விரைவாக நடவடிக்கை எடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி. US$1 மில்லியன் உதவியும் SMART Malaysia குழுவின் உதவிப் பணிகளும் மலேசியாவின் மனிதநேயத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றன,” என்று அவர் கூறினார்.
நெருக்கடியான தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பிரதமர் அன்வாரின் தலைமைத்துவத்திற்கும் அக்கறைக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.



