
மீரா எனப்படும் மலேசிய உரிமைகள் செயல் கட்சியை கண்டு அஞ்சுவது ஏன் என்று அக்கட்சியின் தலைவர் கே.பி. சாமி கேள்வி எழுப்பினார். மீரா கட்சிக்கு தலைவராக நான் பொறுப்பேற்றதும் நாடு தழுவிய அளவில் மீராவுக்கு மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாமல் எனக்கு எதிராக அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார்கள் என்று கேபி சாமி சாடினார். 2007ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் பேரணி மறுமலர்ச்சியால் நாட்டின் அரசியல் தலையெழுத்து மாறியது. ராணுவம் வந்தாலும் என்னை வீழ்த்த முடியாது என்று கூறிய அப்போதைய மஇகா தலைவர் துன் சாமிவேலு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வீழ்த்தப்பட்டார். மேலும் 2008இல் நடந்த தேர்தலில் ம இகா அடையாளம் தெரியாமல் போனது. மஇகாவுக்கு எதிராக இந்தியா சமுதாயமே கொந்தளித்தது. அந்த நேரத்தில் சாமிவேலுவுக்கு கருமக்கிரியை பத்திரிக்கையை நான் அடித்ததாக குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பில் சாமிவேலுயே நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தேன். ஆனால் 13 ஆண்டுகள் கழித்து இப்போது எனக்கு எதிராக அந்த குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று 50 ஆண்டுகள் அரசியலில் முதிர்ச்சி பெற்ற கே.பி. சாமி எச்சரித்தார்.
