
பாதுகாவலர் தேவசகாயம் கடுமையாக தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அவரை தாக்கிய நபர் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டுவர சட்டத்துறை அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ஈப்போவில் உள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பில் நீச்சல் குளத்தில் பாதுகாவலர் தேவ சகாயத்தை கிளந்தானை சேர்ந்த நூர் அஸாஹர் கடுமையாக தாக்கி காயம் விளைவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் நூர் அஸாஹர் மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தேவசகாயத்தை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் கடுமையான காயங்களுக்கு ஆளான பாதுகாவலர் தேவசகாயம் ஆகஸ்ட் 27ஆம் தேதி மரணம் அடைந்தார். இவரின் மரணத்தை ஒரு கொலை என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நூர் அஸாஹர் மீதான வழக்கு விசாரணை வந்தது. இவர் மீதான குற்றச் சாட்டை ஒரு கொலைக் குற்றச்சாட்டாக மாற்றுவதற்கு சட்டத்துறை அலுவலகம் அனுமதி வழங்கி இருப்பதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இவர் தற்போது கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கிறார். இதனிடையே பாதுகாவலர் தேவசாயகத்தின் குடும்பத்தின் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் எம் குலசேகரன் மற்றும் அ.சிவநேசன் வழக்கை கண்காணிக்கிறார்கள். தேவசகாயத்தின் மனைவி பிலோமினா இன்று நீதிமன்றம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
