
கடந்த 1990 ஆண்டில் மிட்வேலி மெகாமால் திட்டத்தில் மலேசியாவில் மட்டுமின்றி உலகம் எங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட்டதை அறிந்து பெரும்பாலானோர் அதிர்ச்சியடைந்தனர். இவை அனைத்தும் ஐ.ஜி.பி. காப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனம் இந்த மிட்வேலி மெகாமாலை மேம்படுத்தி 600 வசதியற்ற குடும்பங்களுக்கு வீடு, 10 தனியார் வீடுகள் மற்றும் ஸ்ரீ மஹா சக்தி மூகாம்பிகை ஆலயத்தை மறுநிர்மாணிப்புச் செய்யும்போதே தொடங்கப்பட்டு விட்டன. இதில் அனைத்து வீடுகளும் மறுநிர்மாணிப்பு செய்யப்பட்டப் பிறகு ஆலயத்தை என்ன செய்வது என்றே அந்நிறுவனத்திற்குத் தெரியவில்லை. இந்நிலையில் ஆலயத்தின் வீடு மற்றும் போதி மரத்தையும் இடிக்க அந்நிறுவனம் விரும்பவில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வுக் காணும் வகையில் சமரசத் தீர்வுக்கு அப்போதைய சிலாங்கூர் அரசு ஒரு பரிந்துரையை முன்வைத்தது. இதில் ஐ.ஜி.பி. குழும சிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ரோபர்ட் டான் மற்றும் மிட்வேலி சிட்டி தலைமை நிர்வாக அதிகாரி அந்தோணி ஆகியோரைச் சமாதானப்படுத்தும் வகையில் மெகாமால் வளாகத்திற்குள் ஆலயத்தை நிர்மாணிக்கும் யோசனையை மிட்வேலி சிட்டியின் நிர்வாக இயக்குநர் எம்.கே.சென் முன்வைத்தார். இதற்கு அவர்கள் இணங்கியது மட்டுமின்றி ஆலயத்தின் தொடக்கக்கட்ட மறுநிர்மாணிப்புக்குக் கட்டணம் செலுத்தி ஆலயத்தின் நில அளவையும் 30,000 சதுர அடியாக உயர்த்திக் கொடுத்து உதவினர். இதில் மிகவும் ஆச்சரியப்பட வைப்பது என்னவென்றால் ஆலயம் 90 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதோடு மாத வாடகை வெறும் 10 வெள்ளி மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
