
கிள்ளான் செந்தோசா வட்டாரத்தில் ‘பசுமை – தூய்மை’ என்னும் இலக்குடன் இரு வாரங்களுக்கு முன்னர் 500 மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் நூறு மரக்கன்றுகளை ‘அறிவா ஜெனரல் செர்வீசஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அறிவா அன்பளிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தோசாவில் மரக்கன்றுகள் நடும் பணி சிறப்பாக நடை பெற சுற்று வட்டார அரசுசாரா அமைப்புகள், வழிபாட்டு தலங்கள், ரோட்டரி கிளாப் போன்ற தன்னார்வ அமைப்புகள், செந்தோசா தொகுதி நலக்குழு உறுப்பினர்கள், செந்தோசா சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தன்னை இணைத்துக் கொள்ளும் ‘செந்தோசா ஸ்குவாட்’ அமைப்பினர் ஆகிய தரப்பினரின் முழு ஆதரவு வழங்கினார். இந்தப் ‘பசுமை – தூய்மை’ நிகழ்ச்சி இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மேற்கொண்ட 500 மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஜாலான் முகமட் தாஹிர் மற்றும் தாமான் செரி பகுதியில் வெற்றிகரமாக பூர்த்தி அடைந்தது.
இன்று 500வது மரக்கன்று நடும் விழாவில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சான் மற்றும் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரும் அமானா கட்சி தலைவருமான முகமட் சாபு ஆகியோர் உட்பட நகராண்மைக் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு கரம் நீட்டி, தோள் கொடுத்த அனைவருக்கும் டாக்டர் ஜி.குண்ராஜ் தனது சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.





