
இந்திய சமுதாயத்தை பொருளாதாரத்தில் உயர்த்தப் போகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய ம இகா தேசிய தலைவர் துன் சாமிவேலு மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். பொருளாதாரத்தில் முன்னேற போகிறோம் என்று நம்பிக்கையில் இந்தியா சமுதாயமே 10 கோடி வெள்ளியை வாரி வழங்கியது. ஏழை இந்திய சமுதாயம் வங்கியில் பணத்தை கடனாக வாங்கி முதலீடு செய்தது. ஏராளமான தோட்டப் பாட்டாளிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்து முதலீடு செய்தனர். மேலும் பலர் தங்களது ஆடு மாடுகளை விற்றும் பணத்தை போட்டனர். ஆனால் பணத்தை போட்ட மக்கள் கேள்விகளைக் கேட்டபோது ரத்தம் சொட்ட சொட்ட அடித்து விரட்டப்பட்டனர் என்பது பழைய வரலாறாகும். கடந்த பத்தாண்டுகள் முன்னர் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆலோசனை பேரில் பங்கு பணம் வாங்கி பங்குதாரர்களுக்கு பணம் திருப்பித் தரப்பட்டது. பணத்தைப் போட்டவர்களுக்கு அந்த பணம் திரும்ப கிடைத்தது. ஆனால் எந்தவொரு வட்டியும் இல்லை. இறந்தவர்கள், பங்கு பத்திரத்தை தொலைத்தவர்கள் மற்றும் பணத்தை மீட்டு கொள்ள மறுத்தவர்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

மைக்கா ஹோல்டிங்ஸ் மூடும் நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது பணத்தைப் பெற்றுக் கொள்ளாதவர் தங்களது பணத்தை மீட்டுக் கொள்ள வரும்படி சுற்றறிக்கை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவரிடம் பேசியபோது போட்ட பணம் மட்டுமே திருப்பி கொடுக்கப்படும். வட்டி எதுவும் கொடுக்கப்படாது என்று விளக்கம் கொடுத்தனர் என மீரா கட்சியின் தேசிய தலைவர் கேபி சாமி தெரிவித்தார். மைக்கா ஹோல்டிங்ஸில் நானும் ஒரு பங்குதாரர் என்ற முறையில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் எந்த ஒரு வட்டியும் இல்லாமல் பணத்தை மீட்க மாட்டேன் என்று அவர் சொன்னார். இன்னமும் ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள் பணத்தை மீட்காமல் உள்ளனர். போட்ட பணத்திற்கு வட்டியோடு அதாவது 40 ஆண்டுகளை வட்டியை சேர்த்து பணத்தை திருப்பித் தர வேண்டும். இதற்காக மீரா கட்சி ஒரு குழுவை அமைத்து இருப்பதாக அவர் சொன்னார். பாதிக்கப்பட்ட பங்குதாரர்களுக்கு உரிய பணத்தை பெற்றுத் தரும் முயற்சியில் நாங்கள் களம் இறங்கி இருக்கிறோம் என்று அவர் சொன்னார். இது தொடர்பில் மிக விரைவில் அறிவிப்பு செய்யப்படும் என்று கேபி சாமி அறிவித்தார்.
