
நவராத்திரியை முன்னிட்டு கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கம் 48ஆவது ஆண்டாக நவசக்தி நவவிழாவை விமரிசையாக ஏற்பாடு செய்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை செந்தூல் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நவசக்தி நவவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இயக்கத்தின் தலைவர் தேவிகா ஆனந்தமோகன் தெரிவித்தார். கடந்த ஆண்டு நோய்த்தொற்று தாக்கத்தினால் நவசக்தி நவவிழா நடைபெற அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதை முன்னிட்டு இப்போது Sop விதிமுறைகளை பின்பற்றி நவசக்தி நவவிழா நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே நவசக்தி நவவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. சிறுவர்களும் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் இதில் கலந்து கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார். கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் செயலாளர் வி.எம். குணசேகரன், பொருளாளர் கருணாகரன், நிர்வாக குழுவைச் சேர்ந்த சேதுராமன், இராதாகிருஷ்ணன், அமரேசன், சுப்பிரமணியம் மற்றும் ஜெயராமன் ஆகியோரும் நவசக்தி நவவிழா விமர்சையாக நடைபெற முழு ஆதரவு வழங்கியுள்ளனர் என்று தேவிகா தெரிவித்தார்.
