
பந்திங் டூசுன் டுரியான் தோட் முன்னாள் தொழிலாளர்களின் வீடுகளுக்கு மீண்டும் மின்சார விநியோகத்தை ஏற்படுத்தும் பணிகளை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பார்வையிட்டார். டூசுன் டுரியான் தோட்டத்திற்கு இவர் வருகை புரிந்த போது தொனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.) நிறுவனத்தின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்கு, தோட்டத்தின் முன்னால் நிர்வாகமும், நில உரிமையாளரும், மின்சாரத்தை துண்டித்துவிட்டதை அடுத்து, தொழிலாளர்கள் சொந்தமாக மின்சார கட்டணங்களை செலுத்தும் வண்ணம், அவர்களுக்கு தனி மீட்டர்களைப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும். அதுவரை தற்காலிக அடிப்படையில் அங்கு மின்சார விநியோகத்தை ஏற்படுத்தி தரும்படி தெனாகா நேஷனல் அதிகாரிகளை டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான அந்த வீடமைப்புத் திட்டத்திற்கு உயிரூட்டும் முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
