
சுபாங் ஜெயா சீ பீல்டு மாரியம்மன் கோவிலைக் கைப்பற்ற கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி பின்னிரவு 2.00 மணிக்கு 200 இளைஞர்களில் பெரும்பாலானோர் கையில் கட்டைகளுடன் திரண்டதாக மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தினால் 200க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகள், மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மட்டுமின்றி கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களும் சேதமுற்றதாக ஆலய தலைவர், எம்.நாகராஜு தெரிவித்தார். இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேர் மீதான விசாரணையின் 10ஆவது சாட்சியாக நாகராஜா சாட்சியம் அளித்தார். அன்றைய தினத்தில் கோவிலின் பின்புற வழியாக வந்தவர்கள் அங்கிருந்த பக்தர்கள் அனைவரையும் விரட்டியடித்தனர். அப்போது நான் உட்பட 20 பேர் கோவிலில் இருந்தோம். அவர்கள் எங்களை மிரட்டியது மட்டுமின்றி அங்கிருந்து வெளியேறி விடும்படி உத்தரவிட்டனர் என்றார் அவர்.



