
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் நோய்த்தொற்று தாக்கத்தினால் நாடு பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. இந்த காலகட்டத்தில் திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. மிக சிறிய எண்ணிக்கையில் மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் வகையில் திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. ஆனால் திருமண வைபவங்கள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற வில்லை. இந்தக் காலகட்டத்தில் மணப்பெண் அலங்கார பயிற்சிகளுக்கு ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த மகளிர் பிரிவுக்கு மித்ரா பல லட்சம் வெள்ளி ஒதுக்கி உள்ளது. மேலும் இந்திய பெண்கள் சம்மந்தப்பட்ட பயிற்சி பட்டறைகளுக்கு பல லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்ட செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோவிட் காலகட்டத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படாத பட்சத்தில் இவர்கள் எப்படி பயிற்சி பட்டறைகளை நடத்தினார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் ஒதுக்கப்பட்ட மித்ரா நீதி எப்படி இதுபோன்ற திட்டங்களுக்கு வழங்கப்பட்டது என்பதை ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா விளக்க வேண்டும் என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தியர் சிறப்பு அதிகாரி தினகரன், ஜொகூர் ஜசெக கிளைத் தலைவர் சுரேந்திரன் பலராமன், செபூத்தே ஜசெக இளைஞர் பிரிவு தலைவர் டிக்காம் லூர்ட்ஸ் மற்றும் பினாங்கு ஜசெக இளைஞர் பிரிவை சேர்ந்த ஜேசன் ரோய் மற்றும் மலாக்கா ஜசெக இளைஞர் பிரிவை சேர்ந்த சுப்பிரமணியம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் லட்சக்கணக்கான மித்ரா நிதி எந்த வகையில் ஒதுக்கப்பட்டது. ஏழை இந்திய சமுதாயத்திற்கு வேண்டிய இந்த நிதி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் வழங்கப்பட்டது அநியாயம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். இது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒளிவுமறைவின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுபற்றி பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர்கள் ஒற்றுமை துறை அமைச்சருக்கு எதிராக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.



