
மாநிலங்களைக் கடக்கலாம் என அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முற்பட்டதால் பினாங்கு செபராங் பிறை பகுதியின் நெடுஞ்சாலையில் இன்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை கெடா மாநிலத்தில் வார விடுமுறை என்பதால் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெரும்பாலோர் தங்களின் குடும்பத்தாரை சந்திக்க பினாங்கு தீவிற்கு செல்ல தொடங்கியதால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகரித்தன. இங்கு சுங்கை டுவா மற்றும் ஜூருவிலிருந்து பினாங்கை நோக்கி செல்லும் வழியிலும் செபராங் ஜெயா பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை சனி ஞாயிறு வார விடுமுறை என்பதாலும்,வரும் செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை என்பதாலும்,நீண்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ஊர்களுக்கு செல்ல பயணத்தை தொடங்கியிருப்பதால்,இந்த வாரம் முழுவதும் நெரிசல் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.