
இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அரசாங்கம் ஆண்டுதோறும் 50 கோடி வெள்ளி ஒதுக்க வேண்டும் என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 1. 15 விழுக்காடாக இருக்கும் இந்தியர்களின் சொத்துடமையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முழு கடப்பாடு மற்றும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். அதே வேளையில் இனங்களுக்கிடையே நியாயமான சமூக பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு மித்ராவைத் தவிர்த்து இதர அரசாங்க நிறுவனங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் துறை முறையான செயல் திட்டங்களை வரைந்து அதன் அமலாக்கத்தை முறையாக கண்காணிப்பதன் மூலம் சமூக பொருளாதார மேம்பாட்டிலிருந்து இந்தியர்கள் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். முழுமையான அரசியல் ஈடுபாட்டுடன் அரசாங்கம் செயல்பட்டால் 12 ஆவது மலேசிய திட்டம் முழுமையடையும்போது இந்தியர்கள் 3 விழுக்காடு சொத்துடமை இலக்கை அடையமுடியும் என்று அவர் கூறினார்.
