
வரும் நவம்பர் 4-ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில கெஅடிலான் தீபாவளி கொண்டாட்டத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி நேற்று தொடக்கி வைத்தார். சிலாங்கூர் மாநில செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி கொண்டாட்டம் விமரிசையாக தொடங்கியது. சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் 22 பிகேஆர் கிளைகளுக்கும் தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கப்படட்டன. இந்த தீபாவளி அன்பளிப்புகள் மக்களுக்குக் கொண்டு செல்லப்படும். அந்த வகையில், முதற்கட்டமாக, 12,000 வெள்ளி மதிப்பிலான அன்பளிப்புப் பொட்டலங்களையும் Jom Shopping பற்றுச் சீட்டுகளையும் செந்தோசா பிகேஆர் சேவை மையத்தில் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி வழங்கினார். அதே சமயம், நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த சிலாங்கூர் மக்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி Cabaran Sihat Sejahtera Sentosa எனும் 60 நாட்களில் உடல் எடைக் குறைப்பு சவாலும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக இந்து கோயில்களுக்கும் அவர் மானியம் வழங்கினார். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான முகம்மட் ஸவாவி அகமாட் முக்னி, மேரு சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் ஃபக்ருல்ராஸி,, புக்கிட் மெலாவாத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா ஸுல்கிஃப்லி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய தீபாவளி கொண்டாட்டப் பயணம் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



