
கடந்த இரண்டு ஆண்டுகளாக மித்ரா நிதியிலிருந்து 8 கோடியே 90 லட்சம் வெள்ளி கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா கூறுவது பெரும் குழப்பமாக இருக்கிறது. ஆகவே இந்த குழப்பங்களுக்கு முடிவுகட்ட இந்திய எம்பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் ஹலிமா விளக்கம் அளிக்க வேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். 2020 ஆம் ஆண்டில் 10 கோடி வெள்ளியில் மித்ராவுக்கு 6 கோடியே 50 லட்சம் மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள 3 கோடியே 50 லட்சம் கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டது. மேலும் 2021 இல் மித்ராவுக்கு 10 கோடி கிடைக்கவில்லை. வெறும் 4 கோடியே 10 லட்சம் வெள்ளி மட்டுமே கிடைத்தது. 5 கோடியே 90 லட்சம் வெள்ளி கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டது என்று அமைச்சர் ஹலிமா குறிப்பிட்டிருக்கிறார். இவர் கூறுவது பெரும் குழப்பமாக இருக்கிறது. எங்களுக்கும் உண்மை தெரியவில்லை. இவரின் பதில் இந்திய சமுதாயத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே மித்ரா நிதி ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பதை அவரும் அவரின் அதிகாரிகளும் இந்திய எம்.பி.களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். அமைச்சர் ஹலிமா வெளிப்படையாக மித்ரா நிதி ஒதிக்கீடு மற்றும் யாருக்கு கடன்களை அடைக்க நிதி பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே இந்த மித்ரா விவகாரத்திற்கு ஒரு தீர்வு பிறக்கும் என்றார் அவர்.
