
மித்ரா நிதியில் 8 கோடியே 50 லட்சம் வெள்ளி மாயமானதன் தொடர்பில் ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஹலிமா மீது நேரடியாக குற்றம் சுமத்தி ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்தும் அவர் ஏன் விசாரிக்கப்படவில்லை என்று கேட்டு மலேசிய முன்னேற்ற கட்சி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ அஸாம் பின் பாக்கிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வினா தொடுத்துள்ளார். மித்ராவில் தலையிட்டு திருட்டுப்பட்டம் வாங்க விரும்பவில்லை என்று சொன்னவர்கள் ஹலிமாவுடன் இரகசிய கூட்டு சேர்ந்து ஏழை இந்தியர்களுக்கான மித்ரா நிதியை இந்த கொரோனா காலத்திலும் ஈவு இரக்கமின்றி சூறையாடியுள்ள நிலையில் அப்படிப்பட்ட சுறா மீன்களை விட்டுவிட்டு சின்னஞ்சிறு நெத்திலி மீன்களை மட்டும் வளைப்பது அறிவுக்கு பொருத்தமில்லாதது. மித்ரா நிதியை முறைகேடாகப் பெற்று தவறான வழியில் பரிவர்த்தனை செய்ததாக பொதுமக்களால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவரும் ஒரு கட்சி தலைவர்களை எஸ்பிஆர்எம் ஏன் விசாரிக்கவில்லை? ஹலிமா நிர்வாகத்தில் மாயமான 8 கோடியே 50 லட்சம் வெள்ளி குறித்தும் முறைகேடாக சுருட்டப்பட்ட 3 கோடியே 50 லட்சம் வெள்ளி குறித்தும் எஸ்பிஆர்எம் ஏன் தனியாக விசாரிக்கவில்லை? எஸ்பிஆர்எம்-இன் தற்போதைய கைது நடவடிக்கையைப் பார்க்கும்பொழுது, அமைச்சரையும் அவருடன் கூட்டு சேர்ந்து சமுதாய நிதியை சூறையாடி அரசியல்வாதிகளையும் காப்பாற்றும் நோக்கத்தில் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சியைப் போலத் தெரிகிறது என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.
