
வரும் மே 22ஆம் தேதி முதல் மீண்டும் RTM 2இல் வசந்தம் நிகழ்ச்சி ஒளியேறுகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ‘ஓ.கே’ என்னும் கட்டண முறையிலான அலைவரிசைக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து டத்தோஸ்ரீ சரவணன், வசந்தம் குழுவிற்கு நம்பிக்கைத் தெரிவித்ததோடு, அதற்கான முயற்சியை விரைவாக எடுத்ததால், வரும் மே 22 ஆம் தேதி முதல் வசந்தம் நிகழ்ச்சி டி.வி 2-ல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. 25 ஆண்டுகள் சமுதாயத்தின் குரலாக, அரசாங்க அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டு வெள்ளிவிழா காணவிருக்கிறது.
ஆரம்பக் காலகட்டத்தில் ‘கருத்துக் களம்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி, நாளடைவில் ‘வசந்தம்’ எனப் பெயர் மாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், இந்திய சமுதாயத்தின் சாதனை, பொருளாதாரம், கல்வி, சமூகப் பிரச்னை, அரசியல், மருத்துவம் எனப் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது



