
கோவிட்-19 தொற்று என்று கண்டறியப்பட்டதன் அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேல் முறையீட்டு நீதிமன்றம் நாகேந்திரனின் வழக்கை எப்போது விசாரிக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை, அவர் கோவிட் தொற்றுலிருந்து எவ்வளவு விரைவாக குணமடைகிறார் என்பதைப் பொறுத்தே அமையும். எது எப்படியோ, தூக்குத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டாலும்,நாகேந்திரனின் கதி என்ன என்பது உறுதியாகத் தெரியவில்லை. இரக்கத்திற்கும் கருணைக்கும் உலகளாவிய முறையீடுகள் இருந்தபோதிலும், சிங்கப்பூர் நாகேந்திரனை தூக்கிலிட முன்வரக்கூடும் என்ற அச்சம் உள்ளது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி வேதனையுடன் தெரிவித்தார். மேல் முறையீட்டு நீதிமன்றம், நாகேந்திரன் அறிவுத்திறன் குன்றியவர் என்ற வாதத்தில் நியாயம் காணப்படுமா என்பதே கேள்வியாகும். நாகேந்திரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சிங்கப்பூர் அரசின் வலிமைக்கு எதிராகப் போராடும் அர்ப்பணிப்புள்ள மனித உரிமை வழக்கறிஞர் ரவி ஆவார். சர்வதேச சட்டத்தின்படி, மனநலம் குன்றியவர் என கண்டறியப்பட்டால், அவரை தூக்கிலிட முடியாது. சிங்கப்பூர் நவீன உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகளுடன் உலகத் தரம் வாய்ந்த நகர நாடாகும். அரசாங்கம் மிக அதீத கட்டுபாட்டுடன் செயல்படுகிறது. பல நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன, ஏனென்றால் அது குற்றங்களுக்கு எதிரான ஒரு தடுப்பாக செயல்படவில்லை அல்லது மறுவாழ்வு வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. இங்கே நாகேந்திரனைப் பற்றியது மட்டும் அல்ல, மாறாக மரணதண்டனைக்காக தங்கள் முறைக்காக காத்திருக்கும் மற்றவர்களைப் பற்றியதும் ஆகும். சிங்கப்பூர் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையாகச் செயல்படுகிறது என குற்றம் சாட்டவில்லை, ஆனால் ஏழைகள் மற்றும் துரதிர்ஷ்டவசமானவர்களுக்கான இரக்கம் மற்றும் புரிதலுடன் உறுதியை சமநிலைப்படுத்த வேண்டும் என்றே கூறுகிறோம் என்று பேராசிரியர் டாக்டர் இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.



